

மக்களவைத் தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. சென்னை கோவிலம்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று, கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் 40 வேட்பாளர்களை ஒரே மேடையில் ஏற்றி அறிமுகப்படுத்தி வைக்கிறார்.
முன்னதாக 40 தொகுதிகளில் களம் காணும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியானது. அதில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் மட்டும் குறிப்பிடப்படாமல் இருந்தது. எனவே அந்த தொகுதியின் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு இன்று விடை கிடைக்கும்.
சீமானுக்கு ‘மைக்’ சின்னம்: இதற்கிடையே, சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மதிமுகவுக்கு அக்கட்சி கோரிய பம்பரம் சின்னம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கேட்டபோது, கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளன. ஆணையம் ஒவ்வொன்றாக ஒதுக்கி வருகிறது என்றார்.