அதிமுகவில் சசிகலா குடும்பத்துக்கு இடமில்லை என்ற முடிவில் மாற்றமில்லை: ஜெயக்குமார்

அதிமுகவில் சசிகலா குடும்பத்துக்கு இடமில்லை என்ற முடிவில் மாற்றமில்லை: ஜெயக்குமார்
Updated on
1 min read

சசிகலா குடும்பத்தினரை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதில்லை என்ற முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கட்சியில் டிடிவி தினகரனை தவிர்த்துவிட்டு சசிகலாவை சேர்த்துக் கொள்வதை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்திவருவதாக சில ஊடகங்களில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இக்கேள்வியை எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், "சசிகலா குடும்பத்தினரை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதில்லை என்ற முடிவில் இருந்து பின்வாங்கப்போவதில்லை" என்று தெரிவித்தார்.

பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தபோது, "வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். வருமான வரி செலுத்துவோருக்கு நிரந்தர கழிவாக ரூ.40,000 வழங்கியிருக்கின்றனர். இதை இன்னும் உயர்த்த வேண்டும்.

கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, பாலாறு மற்றும் காவிரி நதிகளை இணைக்கும் திட்டம், ரயில்வே திட்டங்களில் தமிழகத்தின் கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் என நம்புகிறோம். கிழக்கு கடற்கரை சாலையை 4 வழிச் சாலையாக மாற்றும் திட்டத்திற்கும் இந்த ஆண்டு நிதி ஒதுக்க வாய்ப்புள்ளது. இந்த சாலையை நாகப்பட்டினத்தில் இருந்து கன்னியாகுமரி வரை நீட்டிக்கவும் மத்திய அரசு நிதியளிக்கும் என நம்புகிறோம்" என்றார்.

நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட் உரையை இந்தி, ஆங்கிலம் என மாற்றிமாற்றி வாசித்தது குறித்த கேள்விக்கு, "அண்ணாவின் வழியில் இந்தியை தமிழகம் ஏற்றுக்கொள்ளாது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைத் தான் நாம் கடைப்பிடிக்கிறோம்" எனக் கூறிச் சென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in