

சிறைத் துறையை மேம்படுத்த, சிறைத் துறை பணியாளர்கள், சிறைவாசிகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தும் வகையிலான அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவித்தார்.
தேனியில் மாவட்டச் சிறை:
தேனி மாவட்டத்தில் சிறைச்சாலைகள் ஏதும் இல்லாததால் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த சிறைவாசிகள் தற்போது மதுரை மத்திய சிறைக்கும், வளரிளம் சிறைவாசிகள் மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள பார்ஸ்டல் பள்ளிக்கும் கொண்டு செல்லப்படுகின்றனர்.
எனவே, இச்சிறைவாசிகளை தேனி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜர்படுத்துவதில் உள்ள இடர்பாடுகளைக் களையவும், மதுரை மத்தியச் சிறை மற்றும் பார்ஸ்டல் பள்ளியில் இட நெருக்கடியைக் குறைக்கவும், 14 கோடி ரூபாய் செலவில் தேனி மாவட்டத்தில் 200 சிறைவாசிகள் தங்கும் வகையில், ‘பார்ஸ்டல்’ பள்ளியை உள்ளடக்கிய ஒரு மாவட்டச் சிறை அமைக்கப்படும்.
சிறைப் பணியாளர்களுக்கு குடியிருப்புகள்:
சிறைப் பாதுகாப்புப் பணிகள் மற்றும் அவசர கால நேர்வுகளில் பணிபுரிந்திட, சிறைக் களப் பணியாளர்கள் சிறை வளாகத்திலேயே வசிக்க வேண்டியது அவசியமாகும்.
எனவே, சிறைப் பணியாளர்களின் குடியிருப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஆண்டுதோறும் 100 குடியிருப்புகள் கட்ட அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. அதன்படி 2012-2013 மற்றும் 2013-2014 ஆம் ஆண்டுகளில் தலா 100 குடியிருப்புகளை கட்ட அரசு ஆணையிட்டுள்ளது. அக்கொள்கை முடிவின் தொடர்ச்சியாக, 2014-2015 ஆம் ஆண்டில் 13 கோடியே 16 லட்சம் ரூபாய் செலவில் 100 குடியிருப்புகள் கட்டப்படும்.
அரசின் மேற்காணும் நடவடிக்கைகள், சிறைவாசிகள் மற்றும் சிறைத் துறைப் பணியாளர்கள் கூடுதல் வசதி பெற வழிவகுக்கும்.