Published : 23 Mar 2024 08:49 AM
Last Updated : 23 Mar 2024 08:49 AM
புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநராகவும், தெலங்கானா ஆளுநராகவும் இருந்த தமிழிசை, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதையடுத்து, தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் பொறுப்புகள், ஜார்க்கண்ட் மாநில ஆளுநரான சி.பி.ராதாகிருஷ்ணனிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டன.
தெலங்கானாவில் இரு தினங்களுக்கு முன் பதவியேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று புதுச்சேரி ஆளுநர் மாளிகையில், பொறுப்பு துணைநிலை ஆளுநராக நேற்றுமாலை பதவியேற்றுக் கொண்டார்.இதற்கான குடியரசுத் தலைவரின் ஆணையை, புதுச்சேரி தலைமைச்செயலாளர் சரத்சவுகான் வாசித்தார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழில் பதவிப் பிரமாணம், ரகசியக் காப்பு பிரமாணம் மேற்கொண்டார்.
விழாவில், முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்று, புதியஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்தனர். எதிர்க்கட்சியினர் விழாவில் பங்கேற்கவில்லை.
முன்னதாக, செய்தியாளர்களிடம் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியதாவது: ஜார்க்கண்ட், தெலங்கானா, புதுச்சேரி என 3 மாநிலங்களுக்கு ஆளுநராகப் பொறுப்பேற்கும் வாய்ப்பை அளித்துள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடிக்கு நன்றி. ஒவ்வொரு தமிழனுக்கும் கிடைத்த பெருமையாகவே இதைக் கருதுகிறேன்.
விமர்சனங்களுக்கு பதில்... ஆளுநருக்குத் தரப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்தி, மக்களுக்கு நல்லது செய்வேன். எனது கடமையை சரிவர நிறைவேற்றுவேன். அரசியல் லாபத்துக்காக பிறரை குறைசொல்வோர், விமர்சனம் செய்வோருக்கு நான் பதில் தரப்போவதில்லை.
உலக அளவில் எல்லோரும் போற்றும் வகையில், புதுச்சேரி வளர்ச்சியடைய, என்னால் இயன்றநடவடிக்கைகளை மேற்கொள்வேன். புதுவை அரசுக்கு முழுைமயாக ஒத்துழைப்பேன். யாரின் முன்னேற்றத்துக்கும் நான் முட்டுக்கட்டையாக இருக்கமாட்டேன்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பாக நான் பதில் சொல்வது சரியாக இருக்காது. எனது பார்வைக்கு வரும் அனைத்து கோப்புகளையும் தெளிவாக ஆராய்ந்து, மக்கள்எண்ணங்களுக்கு ஏற்ப, உரிய நடவடிக்கையை மேற்கொள்வேன். ஒருபோதும் கோப்புகள் காத்திருக்க அனுமதிக்க மாட்டேன்.
அதேநேரத்தில், அரசியல் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட கோப்பு மற்றும் அரசியல் சாசனத்துக்கு எதிரான கோப்புக்கு ஆளுநர் அனுமதி அளிக்க வேண்டும் எனக் கருதுவது நியாயமற்றது. மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் சகோதரி தமிழிசைக்கு வாழ்த்துகள். இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT