

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு தொடர்பாக ஆலோசிக்க முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது.
கூட்டத்தில், திமுக செயல்தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்களைத் தவிர காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர், மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ, பாமக சார்பில் ஜிகே மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கே.பாலகிருஷ்ணன், திராவிடர் கழகம் சார்பில் கி.வீரமணி, தேமுதிக சார்பில் சுதீஷ், மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா,
மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் தமிமுன் அன்சாரி, நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரன், கொங்கு பேரவை சார்பில் தனியரசு, மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.
காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பான வழக்கில் கடந்த 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. இதில், தமிழகத்துக்கு காவிரி யில் இருந்து 177.25 டிஎம்சி நீர் வழங்க உத்தரவிடப்பட்டது. நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்ட 192 டிஎம்சியைவிட 14.75 டிஎம்சி தண்ணீர் குறைக்கப்பட்டது. இந்த 14.75 டிஎம்சி நீர் கர்நாடகாவுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டது. மேலும், 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குபடுத்தும் குழுவை அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், காவிரி பிரச்சினை தொடர்பாக ஆலோசிக்க திமுக சார்பில் பிப்.23-ம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பிப்.22-ம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து அரசு சார்பிலேயே அனைத்துக் கட்சிக்கூட்டம் நடப்பதால் திமுக சார்பில் நடக்க இருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ரத்து செய்வதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக அரசு அறிவித்தபடி சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில், ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.