

சென்னை: இணையவழி மூலம் மட்டுமே இலவச பேருந்து அட்டை பெறும் முறையை எதிர்த்து பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் சென்னையில் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பார்வையற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச பேருந்து அட்டையை இனி 7 வகையான சான்றிதழ்களைப் பதிவு செய்து இணையவழியில் மட்டுமே பெற முடியும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பழைய நடைமுறைகளைப் பின்பற்றி எப்போதும்போல மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயண அட்டையை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழகஅலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் சிங்காரவேலன் தலைமை வகித்தார். 30-க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் இதில் பங்கேற்றனர். போராட்டத்தை தொடர்ந்து சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளை எம்டிசியின் பொது மேலாளர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பழைய நடைமுறைப்படி: அப்போது இணையவழியில் இலவச பேருந்து அட்டைக்கு விண்ணப்பிக்கும் முறையை தடுக்க இயலாது. ஆனால் அதனை எளிதாக அணுகும் வகையிலான முயற்சிகளை மேற்கொள்வோம். தேர்தல் நேரத்தில் இதற்கான நடவடிக்கைகள் எடுப்பது சிரமம். எனவே ஜூன் 30-ம் தேதி வரை பழைய நடைமுறைப்படியே இலவச பேருந்து அட்டையை பயன்படுத்திக் கொள்ளுமாறு சுற்றறிக்கையினை வெளியிட்டார். இதையடுத்து, உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.