

ஆண்டிபட்டி: தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூட்டணி கட்சி நிர்வாகிகளை நேற்று முதல் சந்தித்து வருகிறார். தேனி பழனிசெட்டிபட்டி அலுவலகத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்துக்கு சென்ற அவர், மாவட்டத் தலைவர் எம்.பி.முருகேசனை சந்தித்தார். தொடர்ந்து நிர்வாகிகள், தொண்டர் களுடன் ஆதரவு கேட்டுப் பேசினார்.
பின்னர், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகளைச் சந்தித்து பின்னர் ஆண்டிபட்டி சென்றார். அங்கு மகாராசன் எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப் பட்டது.
நிர்வாகிகள் சந்திப்புக்குப் பிறகு தங்க தமிழ்ச்செல்வன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: திமுக அரசின் சாதனைகளைக் கூறி வாக்குக் கேட்பேன். மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியைத் தேனிக்கு கொண்டு வருவேன்.
தேனியில் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டால் களத்தில் சந்திக்க தயார். இங்கு மட்டும் அல்ல தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அந்தளவுக்கு அரசின் திட்டங்களும், தேர்தல் அறிக்கையும் பக்கபலமாக உள்ளன என்றார்.
பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார், ஆண்டிபட்டி கிழக்கு, க.மயிலை ஒன்றியச் செயலாளர்கள் ராஜாராம், சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.