

நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் கொமதேக சார்பில் சூரியமூர்த்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இப்போது அவருக்கு பதிலாக மாதேஷ்வரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியமூர்த்தி சாதி குறித்து பேசியது சர்ச்சையானதுதான் காரணமா? அதன் பின்னணி என்ன?
நாமக்கல் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு (கொமதேக) ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகாவைச் சேர்ந்த கொமதேக மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
சூரியமூர்த்தி பின்னணி என்ன? - கடந்த 2001-ம் ஆண்டு மொடக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியிலும், 2006-ம் ஆண்டு வெள்ளக்கோயில் சட்டப்பேரவை தொகுதியிலும் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2016-ம் ஆண்டு மொடக்குறிச்சி தொகுதியில் கொமதேக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 1992-ம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2007-ம் ஆண்டு முதல் கொமதேகவில் தலைமை நிலையச் செயலாளர் மற்றும் மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார்.
இந்த நிலையில், இவருக்கு நாமக்கல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த சில நாட்களாக சூரியமூர்த்தி தொடர்பான பழைய வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வந்தது.அதில் அவர், "பட்டியலினத்தவர்கள், கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த வீட்டுப் பெண்ணைக் காதலித்து மணம் முடிக்க நினைத்தால், தாயின் கருவில் வளரும்போது தாயோடு கருவறுப்போம்" எனப் பேசி இருந்தார். அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளத்தில் பேசுபொருளானது. இருப்பினும், அது பொய்யான வீடியோ என்றும், தான் அதுபோல பேசவில்லை என்றும் எஸ்.சூரியமூர்த்தி விளக்கமளித்திருந்தார்.இந்த நிலையில் அவரை மாற்றியிருக்கிறது கட்சித் தலைமை.
தொடர்ந்து சாதிய சர்ச்சையில் சிக்கும் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி!: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வட்டமலைப்புதூர் என்ற இடத்தில் கடந்த நவம்பர் 10-ஆம் தேதி வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. இதில், ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு தங்கள் சமுதாயம் சார்ந்த மணமகனையே திருமணம் செய்து கொள்வோம் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொருளாளர் கே.கே.சி.பாலு, பெண்களிடம் மேடையில் உறுதிமொழி வாங்கினார். இந்த உறுதிமொழி வீடியோ வைரலாகி சர்ச்சையானது. இவர், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பெருந்துறை தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் இவர் என்பதும் சர்ச்சையானது. தற்போது, மீண்டும் அக்கட்சி வேட்பாளர் சாதி பற்றி பேசியிருந்தது சர்ச்சையான நிலையில், மக்களவைத் தொகுதி வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.