கன்னியாகுமரியில் நெருக்கடியை மீறி களம் காணும் அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத் யார்?

பசிலியான் நசரேத்
பசிலியான் நசரேத்
Updated on
1 min read

நாகர்கோவில்: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளராக பசிலியான் நசரேத் போட்டியிடுகிறார். மீனவர் சமூகத்தை சேர்ந்த இவருக்கு சிறுபான்மை வாக்குகள் கிடைக்க வாய்ப்பிருப்பதால் போட்டியிலிருந்து விலகுமாறு கொடுத்த நெருக்கடியை மீறி களம் காண்கிறார்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக நாகர்கோவில் கீழராமன்புதூரை சேர்ந்த பசிலியான் நசரேத் அறிவிக்கப்பட்டுள்ளார். 68 வயதான இவர் மீனவ முக்குவர் சமூகத்தை சேர்ந்தவர். துபாய் மற்றும் வெளி நாடுகளில் வர்த்தகம் மேற்கொண்டு வருகிறார். 38 ஆண்டுகளாக அரசியலில் போட்டியிட்டு மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த பசிலியான் நசரேத், திமுக மீனவர் அணி அமைப்பாளராக பணியாற்றி வந்தார்.

ஆனால் அங்கு தனக்கு போதிய அங்கீகாரம் வழங்கவில்லை என்பதால் அதிருப்தியில் கடந்த நவம்பர் மாதம் அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து அதிமுக மாநில மீனவர் அணி இணை செயலாளராக நியமிக்கப்ப்டடார். அதன் பின்னர் குமரி மாவட்டத்தில் அதிமுக சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் அவர் போட்டியிடப் போவதாக அக்கட்சியினர் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வந்தது.

ஆர்.சி. மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் மீனவர் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் இவருக்கு கணிசமாக கிடைக்க வாய்ப் பிருப்பதாகவும், இதனால் காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சிகளுக்கான வாக்குகள் சிதறக்கூடும் என்பதால் மக்களவை தொகுதி தேர்தல் போட்டி யிலிருந்து விலகிக் கொள்ளுமாறும் இவருக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக கூறப்பட்டது. இதனால் பசிலியான் நசரேத்துக்கு பதில் அதிமுக-வில் வேறு வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்ற பேச்சு எழுந்தது.

இந்நிலையில் நேற்று பசிலியான் நசரேத் கன்னியாகுமரி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர், கோட்டாறு மறைமாவட்ட ஆயர் பேரவையின் உறுப்பினர், கோட்டாறு மறைமாவட்ட கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிக் குழு உறுப்பினர், குமரி மாவட்ட முக்குவர் மீனவர் சங்கத்தின் பொருளாளர் ஆகிய பொறுப்புகளை வகித்து வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in