Published : 16 Feb 2018 07:18 AM
Last Updated : 16 Feb 2018 07:18 AM

காதல் திருமணம் செய்த இளம்பெண் வங்கதேசத்தில் மர்ம மரணம்?- காதலன் லவ் ஜிகாத் அமைப்பை சேர்ந்தவரா என விசாரணை

காதலித்து திருமணம் செய்த மகள் மரணம் அடைந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பெண்ணின் நிலை குறித்து விசாரிக்கக் கோரி, திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் பெற்றோர் நேற்று மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் வேலாயுதம்பாளையம் ஆட்டையாம்பிரிவு செட்டிகாடு தோட்டத்தைச் சேர்ந்த தம்பதி முருகானந்தம், செல்வகோமதி ஆகியோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.எஸ்.உமாவிடம் அளித்த மனுவின் விவரம்:

எனது மகள் பூரணதேவி (19), கடந்த 2016 ஜூலை 23-ம் தேதி ரிமுஷேக் என்பவருடன் காணாமல் போய்விட்டதாக போலீஸில் புகார் அளித்தோம். விசாரணையில், திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் இருவரும் பணிபுரிந்து வந்தபோது பழக்கம் ஏற்பட்டு, காதல் திருமணம் செய்து கொண்டதை அறிந்தோம்.

அதன்பிறகு காவல்துறையில் அளித்த புகாரை திரும்பப் பெற்றோம்.

கொல்கத்தாவில் வசித்தனர்

ரிமுஷேக்கின் சொந்த ஊரான கொல்கத்தாவில் இருந்து குடும்பத்தினரை தொடர்புகொண்டு பூரணதேவி பேசி வந்துள்ளார். இதனால், மகள் அங்கு வசிப்பதை தெரிந்துகொண்டோம். சமீபத்தில், இருவரும் வங்கதேசத்தில் வசிப்பதாக அறிந்தோம். கடந்த பிப்.9-ம் தேதி இரவு 10 மணி அளவில் எங்களுக்கு வந்த அலைபேசி அழைப்பில், மகள் இறந்துவிட்டதாக கூறினார்கள்.

ரிமுஷேக் குறித்து விசாரித்ததில், லவ் ஜிகாத் அமைப்பைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. மகளை தவறான நோக்கத்துக்காக அழைத்துச்சென்று கடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இதுதொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுத்து, மகளின் தற்போதைய நிலையை அறிந்து மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

போலீஸ் முதல்கட்ட விசாரணை

திருப்பூர் எஸ்.பி. இ.எஸ்.உமா ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘பூரணதேவி திருமணம் செய்த பிறகு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடும்பத்தினருடன் தொடர்பில்தான் இருந்துள்ளார். கடந்த 9-ம் தேதி தொடர்பு கொண்டவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக முதல்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளோம். விசாரணையில் கிடைக் கும் தகவல்களை கொண்டே அடுத்தகட்ட விசாரணை விரிவடையும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x