

கோவை: மக்களவைத் தேர்தலில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. கோவை மக்களவைத் தொகுதியில் திமுகவில் கணபதி ராஜ்குமார், அதிமுகவில் சிங்கை ஜி.ராமச்சந்திரன், பாஜகவில் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியில் கலாமணி ஆகியோர் பிரதான வேட்பாளர்களாக களம் இறங்குகின்றனர்.
கோவை மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக கடந்த 1998-ல் வெற்றி பெற்றது. பாஜக சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதா கிருஷ்ணன் வெற்றி பெற்று முதல் முறை எம்பி ஆனார். திமுக வேட்பாளர் கே.ஆர்.சுப்பையனை எதிர்த்து 4,49,269 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு 13 மாதங்களில் கவிழ்ந்தது. இதையடுத்து 1999-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.நல்ல கண்ணுவை 54,077 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று 2-வது முறை எம்.பி. ஆனார். 2004 மக்களவைத் தேர்தலில் பாஜகசார்பில் மூன்றாவது முறையாகப் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனிடம் தோல்வி அடைந்தார்.
2014-ல் நான்காவது முறை பாஜக சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், அதிமுக வேட்பாளர் நாக ராஜனிடம் வெற்றி வாய்ப்பை இழந்து 2-ம் இடத்தை பிடித்தார்.
பின்னர் 2019-ல் ஐந்தாவது முறையாக பாஜக சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதா கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர். நடராஜனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். கோவை தொகுதியில் பாஜக வெற்றி பெற்று 25 ஆண்டுகள் ஆகின்றன.
இந்நிலையில், தற்போது பாஜக சார்பில் மாநில தலைவராகப் பதவி வகித்து வரும் அண்ணாமலை, கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால், தமிழகமே உற்றுநோக்கும் நட்சத்திர அந்தஸ்து தொகுதியாக கோவை மாறியுள்ளது.