

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் சென்னையில் நேற்று முன்தினம் கையெழுத்தானது. இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு வந்து,வி ஜயகாந்த நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை சந்தித்து, தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளும், தேமுதிக அவைத் தலைவர் இளங்கோவன், துணைச் செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
பின்னர் பிரேமலதா செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, மீண்டும் வரலாறு படைக்கும். தேமுதிகவுக்கு மாநிலங்களவையில் ஒரு உறுப்பினர் பதவி தருவதாக அதிமுக உறுதி அளித்துள்ளது. அரசியலில் இருந்தால் நிச்சயம் `ரெய்டு' வரும். தமிழகத்தில் தற்போது பல `ரெய்டு'கள் நடக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நேற்று நேர்காணல் நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள், விருப்ப மனு வழங்கியவர்களிடம் நேர்காணல் நடத்தினர். பின்னர் மாவட்டச் செயலாளர்களுடன் பிரேமலதா ஆலோசனை நடத்தி, வேட்பாளர்களை இறுதி செய்தார்.
மத்திய சென்னை தொகுதிக்கு தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி, திருவள்ளூர் (தனி ) முன்னாள் எம்எல்ஏ நல்ல தம்பி, கடலூர் முன்னாள் எம்எல்ஏ சிவக்கொழுந்து, தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் ராமநாதன், விருதுநகர் விஜய பிரபாகரன் ஆகியோர் வேட்பாளர்களாக தேர்வு செய்யப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மாநிலங்களவை உறுப்பினர் பதவி சுதீஷுக்கு வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.