Published : 12 Feb 2018 10:15 AM
Last Updated : 12 Feb 2018 10:15 AM

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ பாதித்த இடத்தில் தனியார்பொறியாளர் வல்லுநர் குழு ஆய்வு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ பாதித்த இடத்தில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் பூகோள முறையிலான ஆய்வில் தனியார் பொறியாளர் வல்லுநர் குழு நேற்று ஈடுபட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 2-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் வீரவசந்தராயர் மண்டபம் சேதமடைந்தது. அங்கு சீரமைப்பு பணிகள் தொடங்கப் பட்டுள்ளன.

இதனிடையே, ஓய்வுபெற்ற பொறியாளர் பாலசுப்பிரமணி யன் தலைமையிலான 12 பேர் அடங்கிய வல்லுநர் குழுவினர் முதல் கட்ட ஆய்வை மேற்கொண்ட நிலையில், சில ஆலோசனைகளை கோயில் நிர்வாகத்திடம் கூறியுள்ளனர். இன்னும் ஓரிரு நாளில் இக்குழுவினர் இரண்டாவது கட்ட ஆய்வைத் தொடங்க உள்ளனர்.

தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் எரிந்துபோன கடைகளின் கழிவுகளை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. வெப்பம் தாக்கியதால் பலவீனமாக உள்ள மேற்கூரையைப் பாதுகாக்கும் வகையில் இரும்பு கர்டர்களால் முட்டுக்கொடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வரு கின்றனர்.

இந்நிலையில், தீ பாதித்த இடத்தில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் பூகோள முறையிலான ஆய்வில் தனியார் பொறியாளர் வல்லுநர் குழு நேற்று ஈடுபட்டது. பொறியாளர் சரவணன் தலைமையிலான 15-க்கும் மேற்பட்டோர் ஆய்வுப் பணியை தொடங்கினர். நவீன தொழில்நுட்பக் கருவிகள் (டோட்டல் சர்வே மெஷின்) மூலம் பூகோள முறையில், தீ பாதித்த பகுதியை அளவீடு செய்தனர்.

இதுதொடர்பாக அக்குழுவி னர் கூறும்போது, இந்து அற நிலையத் துறையின் உத்தரவின்பேரில், இந்த ஆய்வை மேற்கொள்கிறோம். பூகோள முறையிலான ஆய்வில் கட்டிடத்தின் உறுதித்தன்மையையும், பழமை மாறாமல் புதுப்பிக்க முடியுமா என்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறோம். இதுதொடர்பான அறிக்கையை கோயில் நிர்வாகத்திடம் விரைவில் சமர்ப்பிப்போம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x