Published : 22 Mar 2024 05:20 AM
Last Updated : 22 Mar 2024 05:20 AM

மணிக்கு 200 கி.மீ. வேகம்: அதிவேக வந்தே பாரத் ரயில் திட்ட பணிகள் தொடக்கம்

கோப்புப் படம்

சென்னை: சென்னை ஐசிஎஃப்-ல் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு, நாடு முழுவதும்முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதேபோல, நாடு முழுவதும்முக்கியமான நகரங்களை இணைக்கும் வகையில் அடுத்த5 ஆண்டுகளில் 400 வந்தேபாரத் ரயில்களை இயக்கரயில்வே திட்டமிட்டுள்ளது.

மேலும், வந்தே மெட்ரோ, தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத், பார்சல் வந்தே பாரத் ஆகிய ரயில்களையும் அடுத்தடுத்து தயாரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக வந்தே பாரத் ரயில் திட்டத்துக்கான ஆரம்ப கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் தொடக்கமாக, பெட்டியின் ‘போகி’ எனப்படும் அடிச்சட்ட வடிவமைப்பு குறித்து தனியார் நிறுவனங்களிடம் பேச இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

பெங்களூரில் உள்ள மத்தியபாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான, பி.இ.எம்.எல். நிறுவனத்தில் படுக்கை வசதியுடன் கூடிய பெட்டிகளுடன் முதல் வந்தே பாரத் ரயில்தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பயன்பாட்டுக்கு வந்தவுடன், இதேமாதிரியைக் கொண்டு சென்னை ஐசிஎஃப்பிலும் படுக்கை வசதி கொண்ட வந்தேபாரத் ரயில் தயாரிக்கப்பட உள்ளது.

தற்போது, வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் செல்கின்றன. அடுத்தகட்டமாக 160 கி.மீ.வேகத்தில் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான, பாதைகள் மேம்பாட்டு பணிகள் அந்தந்த ரயில்வே மண்டலங்களில் நடைபெறுகின்றன.

இதுபோல, அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டு, மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக வந்தே பாரத் ரயில் திட்டத்துக்கான, ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ரயில்பாதை மேம்பாடு, சிக்னல் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது.

இதற்கான, ரயில் பெட்டிகளை ஐசிஎஃப் தயாரிக்கஉள்ளது. இந்த ரயில் பெட்டிகளில் முக்கியமானதாக இருக்கும் ‘போகி’ எனப்படும் அடிச்சட்டம் தயாரிப்பு குறித்து, தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு நிறுவனத்தைத் தேர்வு செய்து, அவர்களுடன் ஆலோசனை நடத்தி,அடுத்தக்கட்ட பணியை மேற்கொள்ள உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x