

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் வேட்பாளர் அறிமுகக் கூட்டங்களில் உணவு வழங்கினால் அந்த செலவு, வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும் என்று தேர்தல் செலவின பார்வையாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 3-வது தளத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் தொலைக்காட்சி மற்றும் ஊடக செய்திகள் கட்டுப்பாட்டு அறையை தேர்தல் செலவின பார்வையாளர்கள் சந்தோஷ் சரண் (ஸ்ரீபெரும்புதூர்), மதுக்கர் ஆவேஸ் (காஞ்சிபுரம்) ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் தேர்தல் செலவின பார்வையாளர்கள் சந்தோஷ் சரண், மதுக்கர் ஆவேஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பார்வையாளர் சந்தோஷ் சரண் செல்பேசி எண்-99403 53325, காஞ்சிபுரம் தேர்தல் செலவின பார்வையாளர் மதுக்கர் ஆவேஸ் செல்பேசி எண்-72005 55395. வாக்காளர்கள் தைரியமாக வாக்காளிக்க முன் வர வேண்டும். தேர்தல் விதிகளை மீறி செலவுகள் செய்தால் அதை எங்களிடம் தெரிவிக்கலாம்.
தேர்தல் பறக்கும் படையினர், கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்து விதிகளை மீறி கொண்டு செல்லப்படும் பணம், பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும். உரிய ஆவணங்கள் இருந்தால் அதற்கென இருக்கும் தனிக் குழுவிடம் ஒப்படைத்து பெற்றுக் கொள்ளலாம் என்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு அவர்கள் அளித்த பதில்: வேட்பாளர் அறிமுகக் கூட்டங்களில் உணவு பரிமாறினால் அந்தச் செலவு வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும். குறிப்பிட்ட சில வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை என்றால் அந்த வாகன எண்ணுடன் ஆட்சியரிடம் தெரிவியுங்கள் என்றனர்.