

சென்னை: பாஜக வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டவுடன், அவர் பெயரில் சிவப்பு வட்டம் குறியிட்டு ‘டேக்’ செய்து கோவை அதிமுக வேட்பாளர் பகிர்ந்த எக்ஸ் பதிவு கவனம் பெற்றுள்ளது. அவர் தனது எக்ஸ் பதிவில், அண்ணாமலை கோவையில் போட்டியிடுவதைக் குறிப்பிட்டு, “ஐ அம் வெயிட்டிங்” (I am Waiting) எனப் பதிவிட்டிருக்கிறார். அவரது பின்புலத்தைப் பார்ப்போம்.
யார் இந்த சிங்கை ராமச்சந்திரன்? - சிங்கை ராமச்சந்திரன் தந்தை சிங்கை கோவிந்தராசு. கோயம்புத்தூரில் மில் தொழிலாளியாக இருந்தார். பின்னர் அதிமுக சார்பாக சிங்கநல்லூர் தொகுதி வேட்பாளராக களமிறக்கட்டார். அவர் 1999- ல் காலமானார். இவரின் தாய் தந்தை திருமணம் எம்ஜிஆர் முன்னிலையில் நடந்தது. இவருக்கு ராமச்சந்திரன் என்ற பெயரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சூட்டினார் என்பது குறிப்பிடதக்கது. 18 வயதில் அதிமுக கட்சியில் இணைந்தார்.
2008-ம் ஆண்டு வார்டு செயலாளராக நியமிக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு தகவல் தொழில்நுட்ப பிரிவு பங்களித்தது. அதில் சிங்கை ராமச்சந்திரன் பணி மிகவும் கவனிக்கதக்கது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவு தெரிவித்த முதல் கட்சிச் செயலாளர்களில் சிங்கை ராமச்சந்திரனும் ஒருவர். இதனால் அவர் சசிகலாவால் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இரு அணிகளும் இணைந்ததையடுத்து, மீண்டும் அதிமுக ஐடி பிரிவு மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து தொழில்நுட்பப் பிரிவில் சிறப்பாகப் பணியாற்றிய இவருக்கு கோவை தொகுதியில் மக்களவையில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாரம்பரியமான அதிமுக குடும்பம், ஜெயலலிதாவிடன் நற்பெயர், ஐடி விங் சாமர்த்தியம் எனப் பல காரணங்களுக்காக இவரை அதிமுக மக்களவையில் களமிறங்கியிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது. மக்களவையில் கோவைத் தொகுதி பொறுத்தவரை பலரும் எதிர்ப்பார்க்கப்பட்ட தொகுதியாக இருந்தது. இந்த நிலையில், திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். இவரும் அதிமுக பின்னணி கொண்டவர் என்பது குறிப்பிடதக்கது.
கணபதி ராஜ்குமார் முதலில் அதிமுகவில் இருந்தார். கடந்த 2014-ம் ஆண்டு, அதிமுகவின் கோவை மாநகராட்சி மேயராக இருந்தார். அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருடன் நெருக்கமாக இருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின், வேலுமணி அரசியல் தலையீடுகளால் அதிமுகவிலிருந்து விலகினார். 2021-ம் ஆண்டு திமுகவில் இணைந்தவர். எனவே, அதிமுகவின் பிரமுகராக இருந்தவருக்கு திமுக வாய்ப்பு வழங்கியுள்ளது.
தற்போது அவருக்கு எதிராக அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் களமிறக்கப்பட்டிருக்கிறார். வியாழக்கிழமை வெளியிட்ட பாஜக வேட்பாளர் பட்டியலில் கோவைத் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, கோவையில் அதிமுக - திமுக - பாஜக இடையே தேர்தல் போட்டி அனல் பறக்கும் என சொல்லப்படுகிறது.