

மேட்டூர்: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மேட்டூரில் சுவர்களில் சின்னங்கள் வரைவதில் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ம் தேதி நடைபெறுகிறது. மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடுபவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதேபோல், பாஜக கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்து வருகிறது. இதனால் மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் அரசு மற்றும் அதனை சார்ந்துள்ள இடங்களின் சுவர்களில் தேர்தல் விளம்பரம் செய்ய தேர்தல் ஆணையத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தனியார் சுவர்களில் சம்பந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர்களிடம் முறைப்படி அனுமதி பெற்ற பின்னரே சுவர் விளம்பரம் செய்ய முடியும் என்பதால், விதிமுறைகளை பின்பற்றி சுவர்களில் சின்னங்கள் வரைந்து வருகின்றனர். நகரம் மற்றும் கிராமப்புறங்களில் சுவரில் சின்னம் வரைவதில் அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு, தருமபுரி மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. ஆனால், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட எந்த அறிவிப்பும் இன்னும் வரவில்லை. அதன்படி, தருமபுரி மக்களவை தொகுதிக்குட்பட்ட மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் பாமகவினர் திண்ணை பிரச்சாரம், சுவர்களில் சின்னம் வரைதல் உள்ளிட்ட பணிகளை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாமகவினர், கட்சியின் சின்னமான மாம்பழத்தையும், தேர்தல் தேதி ஆகியவற்றை சுவர்களில் வரைந்து வருகின்றனர்.
மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூர் பகுதியில் தனியார் சுவர்களில் மோடியின் சின்னம் என எழுதப்பட்டு, அதன் கீழே மாம்பழம் வரையப்பட்டுள்ளது. இதனை பார்த்த கட்சியினர் மற்றும் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மோடியின் சின்னம் மாம்பழமா? என்ற கேள்வி மேட்டூர் மக்களிடையே எழுந்துள்ளது. அதேபோல், திமுகவினரும் சுவர்களில் உதயசூரியன் சின்னத்தை வரையும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.