

அதிமுக சார்பில் முதல்கட்டமாக 16 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ளார். இதில், தென்சென்னையில் களமிறங்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன், மதுரை தொகுதியில் போட்டியிடும் பி.சரவணன், ராயபுரம் மனோ ஆகியோர் மட்டுமே பழக்கப்பட்ட முகங்களாக இருந்தனர்.
மற்ற 13 பேரும் புதுமுகங்களாக உள்ளனர். பழனிசாமியின் வேட்பாளர் தேர்வு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியுடன் ஒன்றி இருப்பதாக அதிமுக நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
மொத்தம் உள்ள 16 பேரில், ஜெயலலிதா பேரவையை சேர்ந்த 4 பேருக்கும், ஒன்றிய செயலாளர்கள் 4 பேருக்கும், எம்ஜிஆர் மன்றத்தை சேர்ந்த 2 பேருக்கும், மாணவரணி, இலக்கிய அணி, வணிகர் அணி, மருத்துவர் அணி ஆகியவற்றில் தலா ஒருவருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அடுத்து வரவிருக்கும் பட்டியலில் மகளிர் மற்றும் வழக்கறிஞர் அணி உள்ளிட்டோருக்கும் வாய்ப்பளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 8 வேட்பாளர்கள் நேரடியாக திமுகவை எதிர்த்து போட்டியிடுகின்றனர்.
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும்போது, “கடைக்கோடி தொண்டனும் உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்றால் அது அதிமுகவில் மட்டுமே சாத்தியமாகும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேட்பாளர் தேர்வு அப்படிதான் இருக்கும். அவரைப் போலவே பழனிசாமியும் கட்சியில் அடிமட்டத்தில் உள்ள படித்தவர்கள், இளைஞர்கள், மக்கள் தொண்டாற்றும் ஒன்றிய செயலாளர்களை தேடிப் பிடித்து வேட்பாளராக நிறுத்தியுள்ளார்” என்றார்.
முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறும்போது, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போலவே பலதரப்பட்ட தொண்டர்களையும், புது முகங்களையும், படித்தவர்களையும் பழனிசாமி வேட்பாளராக தேர்வு செய்துள்ளார். இப்போது பழனிசாமியின் வேட்பாளர் தேர்வும், ஜெயலிதாவின் பாணியை பின்பற்றியே இருப்பது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
16 தொகுதி வேட்பாளர் பட்டியல்: வட சென்னை - அமைப்பு செயலாளர் ராயபுரம் மனோ, தென் சென்னை - ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜெ.ஜெயவர்தன், காஞ்சிபுரம் - பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் இ.ராஜசேகர், அரக்கோணம் - சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எல்.விஜயன், கிருஷ்ணகிரி - கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் வி.ஜெயபிரகாஷ், ஆரணி - ஆரணி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.வி.கஜேந்திரன், விழுப்புரம் - மாவட்ட மாணவர் அணி செயலாளர் ஜெ.பாக்யராஜ், சேலம் - ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் பி.விக்னேஷ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் - மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.தமிழ்மணி, ஈரோடு - ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் ஆற்றல் அசோக்குமார், கரூர் - மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கேஆர்எல் தங்கவேல், சிதம்பரம் - பெரம்பலூர் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் எம்.சந்திரகாசன், நாகப்பட்டினம் - ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் ஜி.சுர்சித் சங்கர், மதுரை - மருத்துவ அணி இணை செயலாளர் பி.சரவணன், தேனி - தேனி கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.டி.நாராயணசாமி, ராமநாதபுரம் - விருதுநகர் கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் பா.ஜெயபெருமாள் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
பிரேமலதா அறிவிப்பு: கூட்டணி ஒப்பந்தத்துக்கு பிறகு பிரேமலதா பேசியதாவது: 2011 போன்று மீண்டும் வெற்றி கூட்டணியை அமைத்துள்ளோம். மக்களவைத் தேர்தல் மட்டுமல்ல, சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்றார்.
சுதீஷ், விஜய பிரபாகரன் விருப்பமனு: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் மற்றும் தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் கட்சி சார்பில் போட்டியிட நேற்று விருப்ப மனு அளித்தனர்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறும்போது, “சில கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வராதது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கவில்லை. அதிமுகவை பொறுத்தவரை சொந்த காலில் நிற்கும் கட்சி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் 2014 மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து வெற்றி கண்ட இயக்கம் அதிமுக.
கூட்டணியை நம்பி அதிமுக இல்லை. கூட்டணிக்கு வரும் கட்சிகளை நாங்கள் வரவேற்போம். கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றிக்கு இரவு, பகல் பாராமல், எங்கள் வேட்பாளர்களுக்கு உழைப்பதைவிட கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்றுவோம்” என்றார்.