Published : 21 Mar 2024 05:10 AM
Last Updated : 21 Mar 2024 05:10 AM

சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைப்பு, சிஏஏ ரத்து: திமுக தேர்தல் அறிக்கை செயல் திட்டங்கள்

மக்களவை தேர்தலையொட்டி, திமுக தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி, கே.என்.நேரு உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.படம்: ம.பிரபு

சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500, பெட்ரோல் ரூ.75, டீசல் ரூ.65 என விலை குறைக்கப்படும். மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம், புதிய கல்விக் கொள்கை ஆகியவை ரத்து செய்யப்படும் என்பது உட்பட பல்வேறு செயல் திட்டங்கள் அடங்கிய திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு, திமுகவில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக, துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தயாரித்து அளித்த 64 பக்க தேர்தல் அறிக்கையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய செயல் திட்டங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:

  • மாநிலங்கள் சுயாட்சி பெறும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும். ஆளுநர் பதவி தேவையில்லை என்றாலும், அந்த பதவி இருக்கும் வரை, மாநில முதல்வர்களின் ஆலோசனையை பெற்றே ஆளுநரை நியமிக்க வேண்டும். ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கும் 361-வது பிரிவு நீக்கப்படும்.
  • பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படாது. குடியுரிமை திருத்த சட்டம் ரத்து செய்யப்படும். தாயகம் திரும்பிய இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.
  • தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். முஸ்லிம்கள், சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கான சச்சார் கமிட்டி பரிந்துரைகள் செயல்படுத்தப்படும். ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்.
  • ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும். புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும். தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்துவிலக்கு அளிக்கப்படும். நாடு முழுவதும் மாணவர்கள் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடிக்கு நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.10 லட்சம், மாணவர்களுக்கு ரூ.4 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
  • நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்படும். நாடு முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு,குடும்பத் தலைவிகளுக்கு மாதம்ரூ.1,000 மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
  • சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.500, பெட்ரோல் ரூ.75, டீசல் ரூ.65என விலை குறைக்கப்படும். வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை (மினிமம் பேலன்ஸ்) இல்லாததற்கு விதிக்கும் அபராதம் நீக்கப்படும்.
  • திருக்குறள் தேசிய நூலாகஅறிவிக்கப்படும். புதுச்சேரிக்கு மாநிலஅந்தஸ்து வழங்கப்படும். சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்கப்படும்.
  • மத்திய அரசுப் பணிகளுக்கு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு, நேர்காணல் நடத்தப்படும்.
  • ரயில்வே துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ரயில்வேதுறையில் வழங்கப்பட்ட கட்டண சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்.
  • தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும். விமான கட்டண நிர்ணயம் முறைப்படுத்தப்படும்.

இது திமுகவின் தேர்தல் அறிக்கை மட்டுமல்ல. தமிழக மக்களின் தேர்தல் அறிக்கை. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

கனிமொழி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் டிகேஎஸ் இளங்கோவன், ஏகேஎஸ் விஜயன், பழனிவேல் தியாகராஜன், டிஆர்பி ராஜா, கோவி செழியன், கேஆர்என் ராஜேஷ்குமார், சிவிம்பி எழிலரசன், எம்.எம்.அப் துல்லா, எழிலன் நாகநாதன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் ஆகியோர் இடம்பெற்றனர். இக்குழுவினர் தமிழகம் முழுவதும் 14 பகுதிகளில் 1,100 சங்கங்கள், அமைப்புகளை சந்தித்து, 2 லட்சத்துக்கும் அதிகமான கோரிக்கைகளை பெற்று, தேர்தல் அறிக்கை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

'மக்களின் தேர்தல் அறிக்கை': நிகழ்ச்சியில், இதை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின், "தேர்தலுக்கு முன்பாக ஓர் அறிக்கை தயாரித்து. பொறுப்புக்கு வந்த பிறகு அதை முழுமையாக நிறைவேற்றும் கட்சி திமுக. இது திமுகவின் தேர்தல் அறிக்கை மட்டுமல்ல. தமிழக மக்களின் தேர்தல் அறிக்கை" என்று கூறினார்.

21 தொகுதிகளுக்கும் வேட்பாளர் அறிவிப்பு: மக்களவை தேர்தலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில், கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை வழங்கியுள்ள திமுக, 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில், திமுக வேட்பாளர் பட்டியலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

அதன்படி, வடசென்னை - கலாநிதி வீராசாமி, தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை - தயாநிதிமாறன், ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் (தனி) - செல்வம், அரக்கோணம் - எஸ்.ஜெகத்ரட்சகன், வேலூர் - டி.எம்.கதிர்ஆனந்த் போட்டியிடுகின்றனர்.

தருமபுரி - ஆ.மணி, திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை, ஆரணி - தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி - தே.மலையரசன், சேலம் - டி.எம்.செல்வகணபதி, ஈரோடு - கே.இ.பிரகாஷ், நீலகிரி - ஆ.ராசா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

கோயம்புத்தூர் - கணபதி ப.ராஜ்குமார், பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி, பெரம்பலூர் - அருண் நேரு, தஞ்சாவூர் - ச.முரசொலி, தேனி - தங்க தமிழ்ச்செல்வன், தூத்துக்குடி - கனிமொழி, தென்காசி - ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அறிவிக்கப்பட்டுள்ள 21 வேட்பாளர்களில் 11 பேர் புதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x