வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மத்திய இணை அமைச்சர் மீது 4 பிரிவுகளில் வழக்கு

ஷோபா கரந்த்லாஜே
ஷோபா கரந்த்லாஜே
Updated on
2 min read

மதுரை/சென்னை: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழகத்தில் பயிற்சி பெற்றுகர்நாடகா வந்து, இங்கு வெடிகுண்டு வைக்கின்றனர். அப்படித்தான் தமிழகத்திலிருந்து வந்த ஒருவர் ராமேசுவரம் கஃபே ஹோட்டலில் வெடிகுண்டு வைத்துள்ளார்" என்று குற்றம் சாட்டினார்.

மத்திய அமைச்சரின் இந்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மதுரை கடச்சனேந்தலைச் சேர்ந்த தியாகராஜன், மாநகர சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், "மத்திய இணை அமைச்சர் ஷோபாவின் பேச்சு, கர்நாடகா, தமிழ்நாடு மக்களுக்கு இடையே பகை மற்றும் வெறுப்புணர்வை வளர்க்க முயற்சிப்பதாக உள்ளது. தமிழக மக்களை தீவிரவாதிகள் என பொதுமைப்படுத்தி பேசி, இரு மாநிலத்தவரிடையே வெறுப்பை உருவாக்க முயல்கிறார். வன்முறையைத் தூண்டும் வகையிலான அவரது பேச்சு, இரு மாநிலங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, மத்திய இணை அமைச்சர் ஷோபா மீது இந்திய குற்றவியல் சட்டம் 153, 153 (A), 505 (1) (b), 505(2) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தில் புகார்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கை என்ஐஏ விசாரித்து வரும் நிலையில், இந்த சம்பவத்தில் தமிழக மக்களுக்கு தொடர்பிருப்பதாக ஆதாரமின்றி மத்திய அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். இது இரு மாநில மக்களிடையே பகையையும், வெறுப்புணர்வையும் ஊக்குவிக்கும். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசனும் தலைமை தேர்தல் ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.

மன்னிப்பு கோரினார்: மத்திய அமைச்சரின் கருத்துக்குஏற்கெனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், மத்திய அமைச்சர் ஷோபா மன்னிப்பு கோரியுள்ளார். அவர் கூறும்போது "எனது கருத்தால் வருத்தம் அடைந்துள்ள தமிழ் சகோதரர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ராமேசுவரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய நபர், கிருஷ்ணகிரி வனப் பகுதியில் பயிற்சி பெற்றவர் என்று கூறப்பட்டது. அதனால்தான் அவ்வாறு கூறினேன். எனினும் எனது பேச்சு தமிழகத்தில் பலரை காயமடைய செய்திருப்பதாக அறிந்தேன். என் இதயத்தின் ஆழத்தில் இருந்து மன்னிப்பு கேட்பதுடன், எனது முந்தைய கருத்துகளை திரும்பப் பெறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் உத்தரவு: இதனிடையே, மத்திய அமைச்சர் ஷோபா மீது திமுக உள்ளிட்ட கட்சிகள் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக மாநில தேர்தல் பிரிவு தலைமை செயல் அதிகாரிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in