

மதுரை: தூத்துக்குடியைச் சேர்ந்த குமரன்,உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் பிறந்தவர். கப்பலோட்டிய தமிழன் என்றழைக்கப்படும் வஉசி கோவைசிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு செக்கு இழுக்கும் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த செக்கு இன்றும் கோவை சிறையில் பாதுகாக்கப்படுகிறது.
அந்த செக்கை பள்ளி, கல்லூரிமாணவர்கள், பொதுமக்கள் பார்வையிட்டு, அவரது வரலாற்றைத் தெரிந்து கொள்ளும் வகையில், வஉசி நினைவு இல்லம் அமைந்துள்ள ஒட்டப்பிடாரத்துக்கு செக்கை மாற்ற வேண்டும். இந்தகோரிக்கை தொடர்பாக அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே,கோவை மத்திய சிறையில் உள்ள,வஉசி இழுத்த செக்கை ஒட்டப்பிடாரத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, “கோவை சிறையில்வஉசி இழுத்த செக்கு பாதுகாக்கப்படுகிறது. கோவை சிறையில் இருக்கும் செக்கை வேறு இடத்துக்குமாற்ற பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்” என்றார்.
பின்னர் நீதிபதிகள், “மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மனுதாரரின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.