கோவை ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குருவுக்கு மூளையில் பாதிப்பு: டெல்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை

கோவை ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குருவுக்கு மூளையில் பாதிப்பு: டெல்லி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை
Updated on
1 min read

கோவை: கோவை ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு(66), மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.

கோவை ஆலாந்துறை அருகே சத்குரு நடத்தி வரும் ஈஷா யோகா மையத்தில் அண்மையில் மகாசிவராத்திரி விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்மற்றும் 3 மாநில ஆளுநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கடந்த 4 வாரங்களாக தலைவலி இருந்த நிலையிலும் மகா சிவராத்திரி விழா மற்றும் டெல்லியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் சத்குரு கலந்துகொண்டார். கடந்த 17-ம் தேதி தலைவலி அதிகரித்ததால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டதில், மூளைப் பகுதியில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், இடது காலும் பலம் இழக்கத் தொடங்கியது. இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். தற்போது அவர் நலமாக இருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில், ‘‘சில நாட்களுக்கு முன்னர் சத்குரு அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் வேகமாக குணமடைந்து வருகிறார். கவலைப்பட ஒன்றுமில்லை.

சத்குருவின் உடல்நிலையில், எதிர்பார்த்ததைவிட சிறப்பான முன்னேற்றம் உள்ளது. மருத்துவர்கள் கூறும்போது ‘சத்குரு எங்களதுமருத்துவ நடவடிக்கைகளைத் தாண்டி, தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்கிறார்' என்றனர்.

இது சவாலான சூழல்.ஆனாலும், மிகவும் சவாலான சூழ்நிலைகளைக்கூட, எவ்வாறு அழகாக சமாளிக்க முடியும் என்பதை சத்குரு நிரூபித்துக் காட்டியுள்ளார்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in