Published : 12 Feb 2018 09:15 AM
Last Updated : 12 Feb 2018 09:15 AM

தஞ்சை மாவட்டத்தில் 155 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்: ஓபிஎஸ், பழனிசாமி அறிவிப்பு

தஞ்சை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தினகரன் ஆதரவாளர்கள் 155 பேர், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஆர்.கே.நகர். சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, தஞ்சை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த 155 நிர்வாகிகள் நேற்று நீக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கட்டுப்பாட்டை மீறி..

அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதாலும் தஞ்சை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றனர்.

தஞ்சை வடக்கு மாவட்ட அவைத் தலைவர் என்.ஜோதி, மாவட்ட இணைச் செயலாளர் ஜி.அன்னபூரணி, துணை செயலாளர்கள் ஆர்.ராஜேஸ்வரி, சி.நாகராஜன், பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.ரெஜியா பேகம் சாலிபு, திருநாகேஸ்வரம் பேரூராட்சி செயலாளர் எஸ். சிங்காரவேலு, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலு.கார்த்திகேயன், மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் ஆர்.பரணி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள், பேரூராட்சி, ஊராட்சி செயலாளர்கள் என 155 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகின்றனர்.

அதிமுகவினர் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x