

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மூத்த அர்ச்சகர் நடராஜ சாஸ்திரி, நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார். காமாட்சி அம்மன் கோயிலுக்கும், சங்கர மடத்துக்கும் வருமாறு, குடியரசுத் தலைவருக்கு நடராஜ சாஸ்திரி அழைப்பு விடுத்தார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலின் மூத்த அர்ச்சகராக இருப்பவர் நடராஜ சாஸ்திரி. இவர் ஆண்டுதோறும் தசாமஹா வித்யா ஹோமத்தை காமாட்சி அம்மன் கோயிலில் நடத்தி வந்தார். இந்த ஆண்டு காமாட்சி அம்மன் கோயிலுக்கு அருகே உள்ள கௌசிகேஸ்வரர் கோயிலில் இந்த ஹோமத்தை நடத்தினார்.
இந்த ஹோமம் முடிந்த நிலையில் நடராஜ சாஸ்திரியும், காஞ்சிபுரம் வரவேற்புக் குழு உறுப்பினர் சி.வெங்கட்ராமனும் புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தனர். அப்போது அவருக்கு ஹோமத்தின் பிரசாதத்தையும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரசாதத்தையும் வழங்கினர்.
பின்னர் இருவரும், காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களை தரிசிக்கவும், சங்கர மடத்துக்கும் வருமாறு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுத்தனர்.
குடியரசுத் தலைவருடனான சந்திப்பு குறித்து நடராஜ சாஸ்திரி கூறியதாவது: குடியரசுத் தலைவர் மிகுந்த அன்புடன் எங்களுடன் பேசிக் கொண்டிருந்தார். எங்களது அழைப்பை ஏற்று, காஞ்சிபுரம் வந்து கோயில்களை தரிசிப்பதாகத் தெரிவித்தார். முக்கிய அலுவல்களுக்கு இடையே எங்களை சந்தித்த குடியரசுத் தலைவருக்கு நன்றி, என்றார்.