Published : 21 Mar 2024 04:00 AM
Last Updated : 21 Mar 2024 04:00 AM
சேலம்: மக்களவைத் தேர்தலையொட்டி சேலம் திருமண மண்டப உரிமையாளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என சேலம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலச்சந்தர் அறிவுறுத்தியுள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி திருமண மண்டப உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலச்சந்தர் பேசியது: தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால், திருமண மண்டபங்கள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் குறித்த விவரம் தேர்தல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். திருமண மண்டபங்களில் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் போது அதிக கூட்டம் சேர்ந்தால், அதைப் பற்றிய தகவல் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
அரசியல் சார்புடைய நிகழ்வுகள் நடந்தாலும் உடனடியாக தெரிவிக்க வேண்டும். திருமண மண்டபங்கள், இதர சமுதாய கூடங்களை அரசியல் கட்சி பிரமுகர் களுக்கு வாடகைக்கோ அல்லது இலவசமாகவோ விடக்கூடாது. அதேபோல, இங்கு வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருள், வேட்டி, சேலைகள் போன்றவை வழங்குவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. வளைகாப்பு, பிறந்தநாள், காதுகுத்து, குழந்தைகளுக்கு பெயர் சூட்டுதல், சமுதாய சடங்கு என்ற பெயரில் மண்டபங்களை வாடகைக்கு எடுத்து வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடாவோ, பரிசுப்பொருள் வழங்குவதோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
சமுதாய சமையல் கூடமாக மண்டபங்கள் செயல்படக் கூடாது. கோயில் பூஜை, அன்னதானம் என்ற பெயரில் வேட்பாளர்களோ, அவர்களது முகவர்களோ வாக்காளர்களுக்கு விருந்து வைக்கக் கூடாது. திருமண மண்டபங்களை முன்பதிவு செய்பவரின் திருமணப் பத்திரிகை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகல்களை பெற்று முன்பதிவு செய்ய வேண்டும். பதிவு பெற்ற திருமண நிகழ்ச்சியில் அரசியல் சார்புடையதாக இருந்தால், வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும்.
இது குறித்து தேர்தல் கட்டுப்பாடு அலுவலகத்திற்கு தெரிவிக்காத மண்டப உரிமையாளர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் படி, குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு வாக்காளர்களை கவரும் வகையில் உணவு, பரிசுப்பொருள் வழங்கினால் வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படும். திருமண மண்டபம் சமுதாயக் கூடங்களில் இதற்கென முறையான பதிவேடு பராமரிக்க வேண்டும்.
சந்தேகத்திற்கு இடமான வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றால் அது பற்றிய தகவல்களை உடனடியாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை அல்லது வட்டாட்சியர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்டிப்புடனும், முறையாகவும் சமுதாயக்கூடம் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாநகர நல அலுவலர் மோகன், உதவி ஆணையர் வேடியப்பன், தேர்தல் பணி அலுவலர்கள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT