

சென்னை: சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் காவேரி மருத்துவமனையை நடிகர் ரஜினிகாந்த் நேற்று திறந்து வைத்தார் காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் மருத்துவமனைகள் சென்னையில் 2 இடங்கள், திருச்சியில் 2 இடங்கள், ஓசூர், சேலம், திருநெல்வேலி மற்றும் பெங்களூருவில் தலா ஒரு இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் உயர்தர சிகிச்சை மற்றும் பராமரிப்பு அளிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், மருத்துவமனையை திறந்து வைத்தார்.
காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர் மருத்துவர் எஸ்.சந்திரகுமார், நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் மருத்துவர் எஸ்.மணிவண்ணன், இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
விழாவில், காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர் மருத்துவர் எஸ்.அரவிந்தன் செல்வராஜ் பேசியதாவது: காவேரி மருத்துவமனை ஆரம்பத்தில் 30 படுக்கைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. இன்று 2,500 படுக்கைகளுடன் காவேரி மருத்துவமனைகள் குழுமமாக உயர்ந்துள்ளது.
அடுத்த 3 ஆண்டுகளில் 5 ஆயிரம் படுக்கைகளாக அதிகரிக்கப்படும். இந்த மருத்துவமனையில் அதிநவீன மேம்படுத்தப்பட்ட இதயம், நுரையீரல், நரம்பியல், எலும்பியல், கருத்தரிப்பு, கதிரியக்கவியல் சிகிச்சை மையங்கள் உள்ளன.
இதயம் மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சை, கல்லீரல் நோய்கள் மற்றும் மாற்று சிகிச்சை, சிறுநீரக நோய்கள் மற்றும் மாற்று சிகிச்சை மையங்கள் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. 250 படுக்கை வசதிகளைக் கொண்ட இந்த மருத்துவமனையில் உயிர்காக்கும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு (சிசியூ) 75 படுக்கைகள் உள்ளன.
உறுப்பு மாற்று சிகிச்சைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் 30 படுக்கைகள், 6 அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளன. மேலும், 24 மணி நேரமும் அவசர சிகிச்சை மற்றும் உயர்தர சிகிச்சை வசதிகள் மிதமான கட்டணத்தில் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ரஜினிகாந்த் பேசியதாவது: சென்னையில் இசபெல்லா, விஜயா, காவேரி, அப்போலோ, ராமச்சந்திரா மற்றும் சிங்கப்பூர் எலிசபெத், அமெரிக்கா மேயோ கிளினிக் வரையிலான மருத்துவமனைகளுக்கு இந்த உடம்பு போய்விட்டு வந்துள்ளது.
அதனால், மருத்துவர்கள், செவிலியர்கள் மீது மிகப்பெரிய மரியாதை உள்ளது. அவர்களின் உதவியாலும், அதிநவீன மருத்துவ தொழில்நுட்பத்தாலும் நான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
இந்த மருத்துவமனை மிகப்பெரிய அளவில் புகழ் பெறும். மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை பார்க்க போவோம். இல்லையென்றால் நோயாளிகளாகப் போவோம். ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு நான் நோயாளியாக சென்று அனுமதியானேன். எனக்கு மிகவும் நல்ல முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஒருவர் வாழ்க்கையில் முன்னேற ஒழுக்கம் இருக்க வேண்டும். அர்ப்பணிப்பு, கடின உழைப்பும் முக்கியம். இவை இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். முன்பெல்லாம் ஆழ்வார்பேட்டையில் காவேரி மருத்துவமனை எங்கே இருக்கிறது என்று கேட்டால், நடிகர் கமல்ஹாசன் வீட்டின் பக்கத்தில் இருக்கிறது என்று சொல்வார்கள்.
ஆனால், இப்போது கமல்ஹாசன் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்டால் காவேரி மருத்துவமனை பக்கத்தில் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இதை ஒரு பேச்சுக்காகச் சொல்கிறேன். கமல்ஹாசனை கலாட்டா செய்வதாக யாரும் தவறாக நினைக்க வேண்டாம். தேர்தல் நேரமாக இருப்பதால் மூச்சு விட்டால் கூட பயமாக உள்ளது.
மருத்துவ தலைநகரம் சென்னை: இந்தியாவிலேயே மருத்துவ தலைநகரமாக சென்னை இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது தமிழர்கள் பெருமைப்படக்கூடிய விஷயம். இப்போதெல்லாம் யாருக்கு எப்போது, என்ன நோய் வரும் என்று தெரியாது. வடபழனி சுற்றுப்புற பகுதி மக்களுக்கு இந்த காவேரி மருத்துவமனை மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.