

2024 மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை புதன்கிழமை அறிவித்தது திமுக. அதில் புதியவர்கள் 11 பேருக்கு வாய்ப்பு வழங்கியதாக கூறியது திமுக. அதேவேளையில், அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. புதிதாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் அதிமுகவில் இருந்து வந்தவர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது. எனவே, சீனியாரிட்டி அடிப்படையில் பட்டியலைப் பார்ப்போம்.
1. ஜெகத்ரட்சகன் - அரக்கோணம்: ஜெகத்ரட்சகன் 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் அதிமுக கட்சி சார்பாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். 1989-ம் ஆண்டு எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அதிமுக ஜானகி, ஜெயலலிதா என இரு பிரிவுகளாகப் பிரிந்தது. அப்போது ஜானகி அணியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பின் திமுகவில் இணைந்தார்.
தற்போது, திமுகவில் முக்கியமான தலைவராக வலம் வருகிறார். இவர் கடந்த முறை அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது இந்தத் தேர்தலிலும் அதே தொகுதியைத் திமுக ஒதுக்கியுள்ளது. 1999-ம் ஆண்டு தொடங்கி அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் அதிக முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜெகத்ரட்சகன் என்பது குறிப்பிடதக்கது. இவர் வழக்கு, விசாரணை என சர்ச்சையில் சிக்கிய நிலையிலும் திமுக இவருக்கு எம்.பி சீட் வழங்கியுள்ளது.
2. தங்க தமிழ்ச்செல்வன் - தேனி: 2001-ம் ஆண்டு ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால், ஜெயலலிதாவால் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இயலாத நிலை ஏற்பட்டது. அதன்பின், அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் ஜெயலலிதா. இந்த நிலையில், அவர் முதல்வராக ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்னும் சூழலில் தன் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் தங்க தமிழ்ச் செல்வன்.
இப்படியான அதிமுக விசுவாசியாகத் தான் இருந்திருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுகவின் ராஜ்ய சபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியில் இணைந்தார். 2019-ம் ஆண்டு அக்கட்சி சார்பாக தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். அந்த ஆண்டே அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அவருக்கு தற்போது திமுக சார்பாக மக்களவையில் தேனி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
3. செல்வகணபதி - சேலம்: 1991-1996-ம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் அதிமுக கட்சியின் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 1999-ம் ஆண்டு அதிமுக சார்பில் சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், 2008-ம் ஆண்டு திமுகவில் இணைந்தார்.
2010-ம் ஆண்டு திமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். அதிமுக ஆட்சிக் காலத்தில் சுடுகாடுக்கு மேற்கூரை அமைப்பதில் ஊழல் நடந்ததாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில், அவர் குற்றவாளி என 2014-ம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம். இதனால், இவரின் மாநிலங்களவைப் பதவி பறிபோனது. குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு அரசியல் தலைவர், ஊழல் வழக்கில் தண்டனை பெற்று தன் மாநிலங்களவைப் பதவியைப் பறிகொடுத்தவர் என்னும் பெயர்தான் இவருக்கு கிடைத்தது. தற்போது, 25 ஆண்டுகளுக்குப் பின் சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட திமுக வாய்ப்பு வழங்கியுள்ளது.
4. கணபதி ராஜ்குமார் - கோவை: கணபதி ராஜ்குமார் முதலில் அதிமுகவில்தான் தன் அரசின் பயணத்தைத் தொடங்கினார். கடந்த 2014-ம் ஆண்டு, அதிமுகவின் கோவை மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருடன் நெருக்கமாக இருந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர். அதனால் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவரும் கூட. ஜெயலலிதா மறைவுக்குப் பின், வேலுமணி அரசியல் தலையீடுகளால் அதிமுகவிலிருந்து விலகினார்.
2021-ம் ஆண்டு திமுகவில் இணைந்தவர், செந்தில் பாலாஜியுடனும் நெருக்கமாக இருந்திருக்கிறார். இருவருக்கும் அதிமுக தாய் கழகம் என்னும் அடிப்படையில் இந்த நெருக்கம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அதன்பின் கோவை திமுகவில் இவர் கை ஓங்கியது. தற்போது, செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவராக அறியப்பட்ட இவருக்கு கோவைத் தொகுதியில் எம்.பி சீட் வழங்கப்பட்டுள்ளது.
6 சிட்டிங் எம்.பி.க்களுக்கு சீட் மறுப்பு: திமுக வேட்பாளர் பட்டியலில் சிட்டிங் எம்.பி.க்கள் 6 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவர்களின் விவரம்: பொள்ளாச்சி - சண்முகசுந்தரம், தென்காசி - தனுஷ் குமார், தஞ்சை - பழனிமாணிக்கம், சேலம் - பார்த்திபன், கள்ளக்குறிச்சி - கவுதம சிகாமணி மற்றும் தருமபுரி - செந்தில்குமார். சீட் மறுப்புக்கான காரணம் - இதோ வீடியோ ஸ்டோரி...
திமுகவின் 21 வேட்பாளர்கள்: தென் சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை - தயாநிதி மாறன், வட சென்னை - கலாநிதி, ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் - செல்வம், வேலூர் - கதிர் ஆனந்த், அரக்கோணம் - ஜெகத்ரட்சகன், திருவண்ணாமலை - அண்ணாதுரை, ஆரணி - தரணிவேந்தன் கள்ளக்குறிச்சி - மலையரசன், தருமபுரி - மணி, கோவை - கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி - ஈஸ்வரசாமி, சேலம் - டி.எம்.செல்வகணபதி, ஈரோடு - பிரகாஷ் நீலகிரி (தனி) - ஆ.ராசா, தஞ்சாவூர் - முரசொலி, பெரம்பலூர் - அருண் நேரு, தேனி - தங்க தமிழ்செவன், தென்காசி (தனி) - ராணி, தூத்துக்குடி - கனிமொழி. விரிவான வீடியோ ஸ்டோரி இங்கே...
திமுக வாக்குறுதிகள்: இதனிடையே, திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் புதன்கிழமை காலை சென்னை அறிவாலயத்தில் வெளியிட்டார். ‘ஆளுநர்களை நியமனம் செய்யும்போது மாநில முதல்வரின் ஆலோசனையுடன் நியமித்திட புதிய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும், 35 ஆண்டுகளுக்கு மேலாக முகாம்களில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு புதிய அரசு ஆவன செய்யும். இலங்கை திரும்பிச் செல்ல விரும்புவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளும் செய்யப்படும்.
புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதுடன் அதனை ரத்து செய்திட ஆவன செய்யும்; அனைத்து மாநில மகளிருக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும்; தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்; சிஏஏ ரத்து செய்யப்படும்; பெட்ரோல் ரூ.75-க்கும், டீசல் ரூ.65-க்கும், கேஸ் ரூ.500-க்கும் வழங்கப்படும்; அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும். நிரந்தர ஆட்சேர்ப்புப் பணி மீண்டும் கொண்டுவரப்படும் உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. முக்கிய அம்சங்கள் வீடியோ ஸ்டோரி...