Published : 20 Mar 2024 08:39 PM
Last Updated : 20 Mar 2024 08:39 PM
திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் புதன்கிழமை காலை சென்னை அறிவாலயத்தில் வெளியிட்டார்.
‘ஆளுநர்களை நியமனம் செய்யும்போது மாநில முதல்வரின் ஆலோசனையுடன் நியமித்திட புதிய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும், 35 ஆண்டுகளுக்கு மேலாக முகாம்களில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு புதிய அரசு ஆவன செய்யும். இலங்கை திரும்பிச் செல்ல விரும்புவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளும் செய்யப்படும்.
புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதுடன் அதனை ரத்து செய்திட ஆவன செய்யும்; அனைத்து மாநில மகளிருக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும்; தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும்; சிஏஏ ரத்து செய்யப்படும்; பெட்ரோல் ரூ.75-க்கும், டீசல் ரூ.65-க்கும், கேஸ் ரூ.500-க்கும் வழங்கப்படும்; அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும். நிரந்தர ஆட்சேர்ப்புப் பணி மீண்டும் கொண்டுவரப்படும் உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
“திமுக தேர்தல் அறிக்கை வெறும் காகிதமே” - அண்ணாமலை: “திமுகவின் போலி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும்தான் என்பதை மக்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள். இனியும் திமுகவின் நாடகங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதில் புதிய வேட்பாளர்களாக 11 பேர் அறிவிக்கபட்டுள்ளனர். 3 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேட்பாளர்கள் பட்டியலில் 6 வழக்கறிஞர்கள், 2 முனைவர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் 2 மருத்துவர்கள், 19 பட்டதாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
வாரிசுகள் அடிப்படையில் எதிர்பார்க்கப்பட்டது போல அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். வேலூர் தொகுதியில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்துக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர கனிமொழி, கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மக்களவை தேர்தலுக்கான அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை புதன்கிழமை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதில் 16 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அபார வெற்றி பெறும். அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடியுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் அறிக்கையை விரைவில் எதிர்பார்க்கலாம்” என்றார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள்: அதிமுக - தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு 2 தொகுதிகள்: பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலை மற்றும் டிடிவி தினகரன் கையெழுத்திட்டனர். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், "நாங்கள் கேட்ட தொகுதிகளை கொடுத்துள்ளனர். எந்தெந்த தொகுதிகள் என்பதை பாஜக தலைமை அறிவிக்கும். நான் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பாஜக தலைமை தொகுதிகளை அறிவித்த பின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்” என்றார்.
விருதுநகரில் போட்டியிட விஜய பிரபாகரன் விருப்பமனு: அதிமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அத்தொகுதியில் போட்டியிட மறைந்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் புதன்கிழமை காலை விருப்ப மனு தாக்கல் செய்தார்.
மத்திய அமைச்சருக்கு எதிராக தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம்: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களைத் தொடர்புபடுத்தி பேசிய மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது.
இதனிடையே, பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களைத் தொடர்புபடுத்திப் பேசிய மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே அதற்காக மன்னிப்பு கோரியதோடு தனது கருத்துகளை திரும்பப் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தாமரை சின்னம் வழக்கில் தீர்ப்பு: பாஜகவின் சின்னமாக தேசிய மலரான தாமரையை ஒதுக்கீடு செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மகிழ்ச்சி மிகு நாடுகள் பட்டியலில் ஃபின்லாந்து முதலிடம்: 2024-ஆம் ஆண்டுக்கான உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. ஐ.நா.வின் ஆதரவோடு ஆண்டுதோறும் தயாரிக்கப்படும் இந்த உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் ஃபின்லாந்து முதலிடம் பெற்றுள்ளது. டென்மார்க், ஐஸ்லாந்து 2 மற்றும் 3-ஆம் இடங்களைப் பிடிக்க, ஸ்வீடன் 4-வது இடத்தில் உள்ளது. இஸ்ரேல் 5-வது இடத்தில் இருக்கிறது. இந்தியா கடந்த ஆண்டைப் போலவே 126-வது இடத்தில் உள்ளது.
எதிர்ப்புகளால் பணிந்த சொமேட்டோ!: சைவ உணவு விரும்பிகளுக்காக அறிவிக்கப்பட்ட பச்சை நிற உடையுடனான சுத்த சைவ சேவைக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், ஆடைக் கட்டுப்பாட்டை திரும்பப் பெறுவதாக சொமேட்டோ உணவு டெலிவரி நிறுவனம் அறிவித்துள்ளது. அந்நிறுவனத்தின் சிஇஓ தீபீர்ந்தர் கோயல் கூறும்போது, "சுத்த சைவ உணவு விரும்பிகளுக்காக பிரத்யேக பிரதிநிதிகளை நாங்கள் பயன்படுத்தும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், அவர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு வாபஸ் பெறப்படுகிறது. சொமேட்டோவின் அனைத்து டெலிவரி பிரதிநிதிகளும் ஒரே மாதிரியாக சிவப்பு நிற உடையே அணிவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் 2 சிறுவர்கள்கொலை: உத்தரப் பிரதேச மாநிலம் படாவுனில் முடித்திருத்தும் தொழிலாளி ஒருவர் தனது அண்டை வீட்டில் வசித்து வந்த இரண்டு சிறுவர்களைக் கொடூரமாக கொலை செய்ததாகவும், மற்றொரு சிறுவனைக் காயப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்த நபர் போலீஸ் என்கவுன்டரில் உயிரிழந்தார் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
“இண்டியா கூட்டணி கட்சிகளே அதிக தேர்தல் பத்திர நன்கொடை பெற்றன”: “ராகுல் காந்திக்கு நமது பாரம்பரியம் பற்றி தெரியவும் தெரியாது. தெரிந்தாலும் அவர் அதை மதிக்கவும் மாட்டார். பெண் சக்தி பற்றி தெரியாத ராகுல் காந்திக்கு இந்தத் தேர்தலில் அவர்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சாடியுள்ளார். மேலும், தேர்தல் பத்திர நன்கொடை குறித்தும் அவர் புதிய விளக்கம் அளித்துள்ளார்.அவர், “பாஜக ரூ.6,200 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றுள்ளது என்றால் இண்டியா கூட்டணிக் கட்சிகள் பெற்ற நன்கொடையைக் கூட்டினால் அதுவும் ரூ.6,200 கோடியைத் தொடுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT