

மதுரை: மதுரை மக்களவைத் தொகுதியின் முதல் வேட்பாளராக சுயேச்சை வேட்பாளர் 'போஸ்டர்’ முத்துச்சாமி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தனி இணையதளம், வழக்குகளை சந்திக்க வழக்கறிஞர் குழு, ஊரெங்கும் போஸ்டர் என அவர் கலக்கி வருகிறார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடக்கிறது. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பாளர்கள் வேட்புமனுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போலீஸார், பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதல் முதல் வேட்பாளராக சுயேச்சை வேட்பாளர் போஸ்டர் முத்துச்சாமி என்பவர் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆட்சியர் சங்கீதாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த அவர், ''நாட்டில் தற்போது ஜனநாயகப் படுகொலை நடைபெறுகிறது. இதனை தடுத்து ஜனநாயகம் மிளிரவும், மகளிர் உரிமை நிலை நாட்டவும் தேர்தலில் போட்டியிடுகிறேன்'' என்றார்.
சுயேச்சை வேட்பாளரான முத்துச்சாமி போஸ்டர் ஒட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அரசியல் ரீதியான கூட்டங்கள், கோரிக்கைகள், கண்டன போஸ்டர்களை ஒட்டும்போது அரசியல் மீதான ஆர்வம் வரத் தொடங்கியதால் கடந்த 2023-ஆம் ஆண்டு முதலே மதுரை நாடாளுமன்ற தேர்தலின் முதல் வேட்பாளர் என அச்சிட்டு சுவர் விளம்பரங்களையும், சுவரொட்டிகளையும் ஒட்டி மதுரை மாநகர் முழுவதும் செய்து வந்தார்.
மேலும், மதுரை எய்ம்ஸ் தொடங்கி பல்வேறு மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக போஸ்டரை ஒட்டி அதில் மதுரை நாடாளுமன்ற தொகுதி முதல் வேட்பாளர் போஸ்டர் முத்துச்சாமி என பெயரை அச்சிட்டு, இவர் யார் என்று காவல் துறையினரை தேட வைத்தார்.
போஸ்டர் ஒட்டும் தொழிலில் ஈடுபட்டுவந்த முத்துச்சாமி அரசியலில் காலடி எடுத்துவைத்த பின்னர் தொழிலை தனது பெயருக்கு முன்பாக போட்டு போஸ்டர் முத்துச்சாமியாக அடைமொழியுடன் தனக்குதானே விளம்பரம் செய்துவந்தார்.
தற்போது தேர்தலில் போட்டியிடுவதை முன்னிட்டு, இவர் தனி வலைதளம் தொடங்கி, அதனை நிர்வகித்து தன்னை பற்றிய தகவல்களை அப்டேட் செய்து வருகிறார். தேர்தல் வழக்குகளை சந்திக்க வழக்கறிஞர் குழுவையும் இவர் நியமனம் செய்துள்ளார். தேர்தல் வேட்புமனு தாக்கலின் முதல்நாளே ஏற்கெனவே சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதல் வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார்.