

2014 மக்களவைத் தேர்தலில் பாஜக, தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து பாமக 6 இடங்களில் போட்டியிட்டது. இதில் தருமபுரி தொகுதியில் மட்டும் அன்புமணி வெற்றி பெற்றார். அத்தேர்தலில் பாமக பெற்ற வாக்கு சதவீதம் 6.4 ஆகும்.
2019 மக்களவைத் தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி. 70,753 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். 2019 மக்களவைத் தேர்தலில் பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.
இத்தேர்தலில் பாமக பெற்ற வாக்கு சதவீதம் 5.15 ஆகும். கடந்த 5 ஆண்டுகளில் 1.01 சதவீதம் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. இந்தச் சூழலில், 2024 மக்களவைத் தேர்தலிலும் பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.
போராட்ட குணத்துடன் பொது வாழ்க்கைக்கு வந்த ராமதாஸ் அரசியல் கட்சி தலைவரான பிறகு, பல்வேறு சமரசங்களுடன் அதிமுக, திமுக என மாறிமாறி கூட்டணி வைத்து வெற்றிக் கொடியை நாட்டினார். ராமதாஸுக்கு உள்ள ‘பேஸ் வேல்யூ’ கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. பின்னர் அதே மாதிரியான கூட்டணி நகர்வுகள் பாமகவுக்கு வெற்றியை தேடித் தரவில்லை.
இதற்கிடையே ‘மாற்றம் முன்னேற்றம்’ என்ற முழக்கத்துடன் அன்புமணி 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து இறங்கினார். அதன் பிறகு 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் அக்கட்சி கூட்டணி அமைத்து, களம் கண்டது. 2 தேர்தல்களிலும் தனக்கான வாக்கு வங்கியை பாமக ஓரளவு தக்க வைத்தது.
தற்போதுள்ள சூழலில், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்று பாமக விரும்புகிறது. இதை அதிமுக ஏற்காது என்பதால், இப்போதே பாஜக பக்கம் செல்லலாம் என முடிவெடுத்து, பாஜக தலைமையிலான கூட்டணியை பாமக ஏற்றுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதை உறுதிப்படுத்தும் விதமாக பாஜக தலைவர் அண்ணாமலை பேசும்போது, “அன்புமணி, தமிழகத்தில் மாற்று அரசியலை கொண்டு வர துடித்துக் கொண்டிருக்கிறார். 60 ஆண்டு காலமாக தமிழக மக்களின் வெறுப்பை மட்டும் சம்பாதித்து கொண்டிருக்கும் கட்சிகளுக்கு மாற்றாக நம் கூட்டணி வலிமையானதாக இருக்கும். பாமக எடுத்துள்ள இந்த முடிவு, தமிழக அரசியலை முற்றிலுமாக மாற்றி இருக்கிறது.
2026-ம் ஆண்டில் நாம் அனைவரும் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றம் தமிழகத்தில் நிகழும்” என்று கூறியிருக்கிறார். பாஜகவுடனான இந்தக் கூட்டணி, ‘மாற்றம் முன்னேற்றம் அன்புமணியின் நியூ வெர்ஷனா?’ என பாமக தலைவர் அன்புமணியிடம் கேட்டபோது, “மாற்றம் முன்னேற்றத்தின் புது வியூகம் இது; 2026 சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி நாங்கள் நகர்கிறோம்” என்றார்.