

திண்டுக்கல்: பாஜக கூட்டணியில் பாமக இணைந்ததையடுத்து, கடந்த முறை போட்டியிட்ட திண்டுக்கல் தொகுதியில் மீண்டும் பாமக போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தேர்தல் பணிகளை முன்னதாகவே தொடங்கிய பாஜகவினர் தற்போது தயக்கம் காட்டுகிறார்கள்.
திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட பாஜகவினர் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பாஜக அலுவலகத்துக்கு அருகிலேயும், சட்டப்பேரவை தொகுதி வாரியாகவும் அடுத்தடுத்து தேர்தல் அலுவலகங்களை பாஜகவினர் திறந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் வரை திண்டுக்கல் தொகுதியில் பரபரப்பாக இயங்கிவந்த பாஜகவினர் கூட்டணியில் பாமக, இணைந்ததையடுத்து திண்டுக்கல் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டு விடுமோ என்று திண்டுக்கல் மாவட்ட பாஜக நிர்வாகிகள் கருதுகிறார்கள்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட்டது. அக்கட்சியின் மாம்பழச் சின்னம் ஏற்கெனவே பரிட்சயமானது என்பதால் இந்த முறையும் திண்டுக்கல் தொகுதியை கேட்டு பெற்று களமிறங்க பாமக முடிவு செய்துள்ளது.
அவ்வாறு போட்டியிடும் பட்சத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.