

சென்னை: தேர்தல் ஆணையத்தில் அதிமுக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தரப்பில் கடந்த 18-ம் தேதி ஒரு மனு அளிக்கப்பட்டது. ‘தேர்தல் படிவங்களில் நான் (ஓபிஎஸ்) கையெழுத்திடும் வகையில், நான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்பதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். அல்லது எனக்கும் பழனிசாமிக்கும் வெவ்வேறு சின்னம் ஒதுக்க வேண்டும். அதிமுக (ஓபிஎஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க வேண்டும்’ அதில் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஓபிஎஸ்ஸின் இந்த கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் பா.ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் பழனிசாமி ஆகியோர் மின்னஞ்சல் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
கட்சி விதிகளில் செய்த திருத்தங்கள் செல்லாது என்று அறிவிக்க கோரி அதிமுக உறுப்பினர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதை மறைத்து ஓபிஎஸ், பழனிசாமி இருவரும் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி தொடர்ந்த வழக்கில், ‘ஓபிஎஸ் மற்றும் அவரை சார்ந்தவர்கள் பொதுச் செயலாளர் பழனிசாமியின் செயல்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், உறுப்பினர் என்று தன்னை முன்னிலைப்படுத்த கூடாது. கட்சியின் பெயர், சின்னம், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த கூடாது’ என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது கட்சியில் பிளவு இல்லை. கட்சி சின்னத்தை தங்கள்பிரிவுக்கு ஒதுக்க கோரி ஆணையத்தில் யாரும் மனு அளிக்கவில்லை. எனவே, ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும். கட்சி வேட்பாளர்களுக்கான தேர்தல் படிவங்களில் அவைத் தலைவர் கையெழுத்திட்டு அதன் அடிப்படையில் சின்னம் ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.