Published : 20 Mar 2024 05:54 AM
Last Updated : 20 Mar 2024 05:54 AM

மக்களவைத் தேர்தலில் தமிழகம்-புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பாஜக அணி வெல்லும்: கூட்டணி கட்சித் தலைவர்கள் உற்சாகம்

சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் நேற்று நடைபெற்ற பாஜக அணி பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் இணைந்து நின்று தொண்டர்களை பார்த்து கையசைக்கும் பிரதமர் மோடி. படங்கள்: எஸ்.குரு பிரசாத்

சேலம்: மக்களவைத் தேர்தலில் தமிழகம்-புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும் என்று கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.

சேலத்தில் நேற்று நடைபெற்ற பாஜக அணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். நேற்று மதியம் ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வந்த அவர், காரில் நின்றபடி மேடைக்கு பேரணியாக வந்தார். அவருடன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடன் வந்தனர். அங்கு திரண்டிருந்த தொண்டர்கள் பிரதமர் மீது பூக்களைத் தூவி வரவேற்றனர்.

கூட்டணி கட்சித் தலைவர்களான பாமக நிறுவனர் ராமதாஸ், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து, புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், யாதவ மகாசபை தேசியத் தலைவர்தேவநாதன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், மாநில துணைத் தலைவர்கள் கே.பி.ராமலிங்கம், வி.பி.துரைசாமி, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நடிகர் சரத்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசும்போது, "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் மூலம்வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம்-புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். அகில இந்திய அளவில் 400 தொகுதிகளில் வென்று, 3-வது முறையாகமோடி பிரதமராகப் பொறுப்பேற்பார். வறுமையை ஒழித்து, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வார்" என்றார்.

பாமக தலைவர் அன்புமணி பேசும்போது, "மோடி பிரதமரானவுடன் ஆதிக்க சக்திகளை முழுவதுமாக ஒழித்துக் கட்டினார். அதேபோல, திறமையான விளையாட்டு வீரர்கள், சர்வதேச போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை குவித்துவருகின்றனர். வரும் தேர்தலில் 40 தொகுதிகளையும் வென்று,மோடியை மீண்டும் பிரதமராக்குவோம் என உறுதிகொள்வோம்" என்றார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் பேசும்போது, “பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்பார். அதற்காக அமமுக கடுமையாக தேர்தல் பணியாற்றும். அதேபோல, அனைவரும் தீவிரமாக பணியாற்றினால், 40 தொகுதியிலும் பாஜக கூட்டணி வெற்றிபெறும்” என்றார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, "தமிழகத்துக்கு 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை ஒரே ஆண்டில் அளித்தது பாஜக அரசு. எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும்" என்றார்.

ஜவ்வரிசியும், பெட்ஷீட்டும்...: முன்னதாக, கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக சேலத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு பிரதமர் மோடி வந்தார்.

மேடைக்குச் சென்ற பிரதமர்நரேந்திர மோடிக்கு, குஜராத்மாநில மக்கள் விருப்பத்துடன் உண்ணக்கூடிய, சேலத்தில் தயாரிக்கப்படும் ஜவ்வரிசியை, வெள்ளிப் பெட்டியில் வைத்து பாஜகவினர் வழங்கினர். மேலும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சுவாமி சிலை, கரூர் பெட்ஷீட் ஆகியவையும் பிரதமருக்கு வழங்கப்பட்டன.

தமிழக தேர்தல் முடிவுகள் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்: எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவு

கோவை: கோவையில் நடந்த வாகனப் பேரணி தொடர்பாக, பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டிருப்பதாவது: கோவை மக்கள் என் மனதை வென்றுவிட்டார்கள். இந்த வாகனப் பேரணி பல ஆண்டுகள் எனது நினைவில் நிற்கும்.இதில் அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டது சிறப்பு. இந்த வாழ்த்துகள் பெரிதும் போற்றப்படத்தக்கவை.

தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தப் போகின்றன.எங்கள் கட்சி மாநிலம் முழுவதும் வலுவான சக்தியாக உருவாகி வருகிறது. இனி திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள்இல்லை. 1998-ல் நிகழ்ந்த கோவை தீவிரவாத குண்டுவெடிப்புகளை மறக்க முடியாது. குண்டுவெடிப்பில் நம்மை விட்டுப் பிரிந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினேன்.

இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x