தேர்தல் நடத்தை விதி மீறியதாக பிரேமலதா மீது போலீஸார் வழக்குப் பதிவு

தேர்தல் நடத்தை விதி மீறியதாக பிரேமலதா மீது போலீஸார் வழக்குப் பதிவு
Updated on
1 min read

சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை கோயம்பேடு 100 அடிசாலையில், தேமுதிக சார்பில் உலக மகளிர் தின விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பெண்களுக்கு எம்பி ராய்டிங் 6 மாத கால இலவச பயிற்சிக்குரிய டோக்கன்களை சுமார் 300 பெண்களுக்கு வழங்கியதாகவும், அதற்காக மிகப்பெரிய அளவில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், இது தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் என விருகம்பாக்கம் சட்டப்பேரவை தொகுதி பறக்கும் படை அதிகாரி சத்தியநாராயணன், சிஎம்பிடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறிய பிரேமலதா, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தேமுதிக நிர்வாகி காளிராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் சிஎம்பிடி காவல் நிலைய போலீஸார், பிரேமலதா மற்றும் காளிராஜ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் மீது வழக்கு: மதுரவாயல் நெற்குன்றம் அருகே மேட்டுக்குப்பம் மீனாட்சி நகரில் அதிமுக கொடியேற்றும் விழா,பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், இந்த விழாவுக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

ஆனால் காவல்துறை அனுமதியின்றி நடைபெற்ற இந்த விழாவில்,முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலருமான பெஞ்சமின் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் நெற்குன்றம் கிராம நிர்வாக அலுவலர் குமார், கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

அந்த புகாரில், தேர்தல் நடத்தைவிதிமுறை மீறிய முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்டோர் மீதுநடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டிருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் கோயம்பேடு போலீஸார், பெஞ்சமின் உள்ளிட்டோர் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in