Published : 20 Mar 2024 06:09 AM
Last Updated : 20 Mar 2024 06:09 AM

சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் 2024-25-ம் நிதியாண்டில் 3,000 பெட்டிகள் தயாரிக்க திட்டம்

சென்னை: சென்னை ஐசிஎஃப்-ல் 2024-25-ம் நிதியாண்டில் 3,000 பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில் பெட்டிகள், எல்எச்பி என்னும் நவீன பெட்டிகள், மெமு ரயில் பெட்டிகள் ஆகியவை அதிக அளவில் தயாரிக்கப்பட உள்ளன.

உலக அளவில் ரயில் பெட்டி தயாரிப்பில் முக்கியமான தொழிற்சாலையாக சென்னை ஐசிஎஃப் (ஒருங்கிணைந்த ரயில்பெட்டி தொழிற்சாலை) உள்ளது. இங்கு தற்போதுவரை பல்வேறு வகைகளில் 72,000-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆலையில் தற்போது வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் கவனம் செலுத்தப்படுகிறது. இங்கு தற்போது 60-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் 50-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

இதற்கிடையில், சாதாரண வந்தே பாரத் ரயிலான அம்ரித் பாரத் ரயில், வந்தே மெட்ரோ ரயில் உள்ளிட்ட ரயில்கள் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அம்ரித் பாரத் ரயில் ஏற்கெனவே இரண்டு ரயில்கள் தயாரித்து அனுப்பியநிலையில், மேலும் அம்ரித் வந்தே மெட்ரோ ரயில்கள் தயாரிக்கும் பணியும் நடைபெறுகிறது. இதுதவிர, வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணியும் நடைபெறுகிறது.

இந்நிலையில், சென்னை ஐசிஎஃப்-ல் 2024-25-ம் நிதியாண்டில் 3,000 பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் வந்தே பாரத் ரயில் பெட்டிகள், எல்எச்பி பெட்டிகள், மெமு ரயில் பெட்டிகள் ஆகியவை அதிக அளவில் தயாரிக்கப்பட உள்ளன.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னை ஐசிஎஃப் ஆலையில் நடப்பு நிதியாண்டில் 2,700 பெட்டிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம்.

வந்தேபாரத் ரயில் பொருத்தவரை சுமார் 60 வந்தே பாரத் ரயில்கள் விரைவாக தயாரித்து வழங்கி இருக்கிறோம். இதுதவிர, அம்ரித் பாரத் ரயில் தயாரித்து வழங்கி இருக்கிறோம். எல்எச்பி பெட்டிகள், மின்சார ரயில் பெட்டிகள், மெமு விரைவு ரயில் பெட்டிகள் உள்ளிட்ட ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்குகிறோம்.

சென்னை ஐசிஎஃப்.ல் 2024-25-ம் நிதியாண்டில் 3,000 பெட்டிகளை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 644 வந்தே பாரத் ரயில் பெட்டிகள், 276 மெமு ரயில் பெட்டிகள், 480 மின்சார ரயில் பெட்டிகள், 1400 எல்எச்பி (நவீன பெட்டிகள்) பெட்டிகள் உள்பட 3,000 ரயில் பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்க கூடுதல் காலம் ஆகிறது. இருப்பினும், வந்தேபாரத் ரயில்கள் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x