

சென்னை: மக்களவை தேர்தலையொட்டி, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் செயலாளர் எஸ்.ஆர்.குமரவேல், தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையத்தில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி சங்கர்லால் குமாவத்தை சந்தித்து நேற்று மனு அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது: மக்களவை தேர்தல் தமிழகத்தில் முதல்கட்டமாக வரும் ஏப்.19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு நெறிமுறைகள் மட்டும் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளும் வரும் மார்ச் 22 முதல்நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
மக்கள் பெருவாரியாக கூடும் இதுபோன்ற போட்டிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டிய நேரத்தில், நாளை (இன்று) முதல் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும் தொடங்க உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்ற கட்சிகள்இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை பயன்படுத்தி மக்களிடையே பிரச்சாரம் செய்வதற்கும், பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன.
இதனால் கட்சிகளிடையே மோதல்களும் உருவாகலாம். இதையொட்டி போலீஸாரின் எண்ணிக்கையை பலமடங்கு அதிகரிக்கவேண்டிய நிலையும் ஏற்படுகிறது. எனவே ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மக்களவை தேர்தல் முடிவடையும் வரையில் ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.