Published : 20 Mar 2024 04:04 AM
Last Updated : 20 Mar 2024 04:04 AM

வேலூர் தொகுதியில் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டும் திமுக, பாஜக - குழப்பத்தால் பின்தங்கிய அதிமுக

ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த், டாக்டர் பசுபதி

வேலூர்: தமிழ்நாட்டிலேயே வேலூர் மக்களவைத் தொகுதியில் தான் திமுக – பாஜக வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதிமுகவில் வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட குழப்பத்தால் பிரச்சாரத்தில் பின்தங்கியுள்ளனர்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் இன்று ( 20-ம் தேதி ) மனுத் தாக்கல் தொடங்கி வரும் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி வேட்பாளர்களை அறிவிக்கவுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக மீண்டும் களம் இறங்கும் கதிர் ஆனந்த், பாஜக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இரண்டு தரப்பினரும் சுவர் விளம்பரங்களில் முன்னணியில் உள்ளனர். எதிர்க்கட்சியான அதிமுகவில் வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட குழப்பத்தால் சுவர் விளம்பரம் செய்வதில் பின்தங்கி இருப்பது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதில், வேலூர் மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடும் ஏ.சி.சண்முகம் மக்களவைத் தொகுதியில் ஒரு ரவுண்ட் பிரச்சாரத்தை முடித்து விட்டார் என்றே கூறலாம். மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டப்பேரவை தொகுதி வாரியாக தனது சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடம் முழு வீச்சில் ஆதரவு திரட்டியதுடன், இளைஞர் களுக்கான கிரிக்கெட் போட்டி, மாரத்தான் ஓட்டம், மருத்துவ முகாம், வேலைவாய்ப்பு முகாம்களை நடத்திய பிரச்சார களத்தில் முன்னணியில் உள்ளார்.

விரைவில் பாஜக வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றதும் புதிய நீதிக்கட்சி, பாஜகவினர் இணைந்து வாக்கு சேகரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபடவுள்ளனர். ‘‘எங்கள் கூட் டணியில் எதிர்பார்த்த முக்கிய கட்சிகள் இல்லாத நிலையில் பிர தமர் மோடியும், மத்திய அரசின் திட்டங்களை முன் வைத்து பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். மேலும், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீதான எதிர்ப்பு, அமைச்சர் துரை முருகனை குறிவைத்து பிரச்சாரம் செய் வோம்’’ என்றனர் பாஜக மூத்த நிர்வாகிகள்.

திமுகவை பொறுத்தவரை தற்போதைய மக்களவை உறுப் பினர் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்ற கடந்த காலங் களில் சந்தேகம் இருந்து வந்தது. இதனால், கட்சி பணிகளில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்த அவருக்குத்தான் மீண்டும் வாய்ப்பு என்றதும் கதிர்ஆனந்த் தரப்பினர் உற்சாகத்துடன் அடுத் தக்கட்ட வேலைகளை ஆரம்பித்து விட்டனர்.

மீண்டும் கதிர் ஆனந்த்: கதிர் ஆனந்த்தான் வேட்பாளர் என மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமார் ஏற்கெனவே அறிவித்த நிலையில் மாவட்டம் முழுவதும் திமுகவினர் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். திமுகவில் நிலவி வந்த கோஷ்டி மோதலை மறந்து நிர்வாகிகள் பலர் கதிர் ஆனந்துக்கு சால்வை அணிவித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக அவர் செல்ல முடியாத சில தொகுதிகளுக்கு சென்று நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

‘‘கடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் எங்கள் கட்சியிலேயே இருந்த சிலர் ‘புரூட்டஸ்’களாக எங்களது முதுகில் குத்தியதை தெரிந்துகொண்டோம். கதிர் ஆனந்த்துக்கு மீண்டும் வாய்ப்பு உறுதியானதால் பழைய நிகழ்வு களை மறக்க வேண்டி இருக்கிறது. எதிர்ப்பாளர்களையும் மனம் விட்டு சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறோம். இந்த தேர்தலில் எங்கள் வியூகம் வேறு விதமாக இருக்கும். சிறு பான்மையினர் வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் திமுகவுக்கு கொண்டு சேர்க்க பாடுபடுவோம்’’ என கதிர் ஆனந்த்துக்காக தேர்தல் வேலை களில் தீவிரம் காட்டி வரும் திமுக முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

திமுகவும், பாஜகவும் தேர்தல் பிரச்சாரத்தை ஏற்கெனவே தொடங்கிய நிலையில் அதிமுக வின் நிலை கொஞ்சம் கவலைக் கிடமாக உள்ளது. அதிமுக வேட்பாளராக பேரணாம்பட்டு ஒன்றியத்தைச் சேர்ந்த பொகளூர் பிரபாகரன் நிறுத்தப்படுவார் என முன்னாள் அமைச்சர் வீரமணி தரப்பினர் தெரிவித்தனர். தற் போது, அவர் போட்டியிட விரும்பாததால் குடியாத்தம் ஒன்றிய குழு கவுன்சிலர் இமகிரி பாபு தேர்வானார். அவரும், கடைசி நேரத்தில் மாற்றப்பட்டு ஆலங் காயத்தைச் சேர்ந்த டாக்டர் பசுபதி பெயர் தேர்வாகியுள்ளது.

இது தொடர்பாக, அதிமுக புறநகர் மாவட்ட மூத்த நிர்வாகிகள் கூறும்போது, ‘‘அதிமுக சார்பில் போட்டியிட 46 பேர் விருப்ப மனு அளித்திருந்த நிலையில், 5 பேரிடம் மட்டும் நேர்காணல் நடத்தப்பட்டது. அதில், ஆம்பூரைச் சேர்ந்த தோல் தொழிலதிபர் பங்கேற்றது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர்தான் வேட்பாளர் என்றும் கூறப்பட்டது.

செலவு செய்ய பணமில்லை...: வேலூர் மாநகர மாவட்ட நிர்வாகி ஒருவர் சார்ந்த சமுதாய காவலர் கொடுத்த அழுத்தத்தால் அந்த இஸ்லாமிய வேட்பாளரை நிறுத்த பகீரத முயற்சியும் செய்தார். திடீரென அந்த வேட்பாளர் ‘தன்னிடம் செலவு செய்ய பணமில்லை’ எனக் கூறி பின்வாங்கி விட்டார். வேறு வழியில்லாமல் முன்னரே தேர்வு செய்த நபரின் அணுகிய போது ‘போதும் வேண்டாம்’ என்ற வார்த்தையில் முடித்துவிட்டார்.

வேறு வழியில்லாமல் புதிய நபரை தேடிய போது, வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த டாக்டர் பசுபதி பெயரை முன்னாள் அமைச்சர் வீரமணி ‘டிக்’ செய்துள்ளார். பொதுமக்கள் மத்தியில் டாக்டர் பசுபதிக்கு நல்ல மரியாதை உள்ளதால் வாணியம் பாடி, ஆம்பூர் பகுதிகளில் வாக்குகளை பெறுவார். ஆனால், வேலூர் மாநகர நிர்வாகியின் ‘முந்திரிக்கொட்டை’ வேலையால் கடைசி நேரத்தில் வேட்பாளருக்கு அலைய வேண்டிய தாகி விட்டது’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x