நெல்லையில் 7 ஆண்டுகளாக இருந்த அன்புச் சுவர் அகற்றம்: தேர்தல் நடத்தை விதிகள் காரணமாம்!

நெல்லையில் 7 ஆண்டுகளாக இருந்த அன்புச் சுவர் அகற்றம்: தேர்தல் நடத்தை விதிகள் காரணமாம்!
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலக பிரதான வாயிலின் அருகே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த, ஏழைகளுக்கு பயன் அளித்துவந்த அன்புச் சுவர் தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி அகற்றப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக சந்தீப்நந்தூரி பொறுப்பு வகித்தபோது கடந்த 2017-ம் ஆண்டில் இந்த அன்பு சுவர் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்ற வாசகமும் எழுதப்பட்டிருந்தது. இந்த அன்புச் சுவர் முன்பு வைக்கப்பட்ட இரும்பு கூடைக்குள் பொதுமக்கள் தங்களிடம் தேவைக்கு அதிகமாக உள்ள துணிகளை கொண்டு வந்து வைக்கலாம்.

அவற்றை ஏழைகள் எடுத்து சென்று பயன்படுத்த செய்வதுதான் திட்டத்தின் நோக்கமாக இருந்தது. இந்த அன்பு சுவர் அமைக்கப்பட்டபோது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

சந்தீப்நந்தூரி ஆட்சியர் பொறுப்பிலிருந்து பணி மாறுதலாக சென்றபின் படிப்படியாக அன்புசுவர் திட்டமும் நலிவடைந்தது. ஆனாலும், கடந்த 7 ஆண்டுகளாகவே அங்குள்ள கூடைகளிலும், அறைகளிலும் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தி துணிமணிகளை வைத்துவிட்டு செல்வதும், அவற்றை பலரும் எடுத்து செல்வதுமாக ஓரளவுக்கேனும் அன்புச் சுவர் திட்டம் செயல்பாட்டில் இருந்தது.

இந்நிலையில், திடீரென்று இந்த அன்புச் சுவர் திட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த இருபால் ஆன கூடைகள், மரத்தாலான பெட்டிகள் அகற்றப்பட்டன. இது குறித்து விசாரித்தபோது, மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக அன்பு சுவர் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் வேட்பாளர்கள், தேர்தல் அலுவலக பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலருக்கும் இந்த அன்பு சுவர் இடையூறாக இருக்கும் என அதிகாரிகள் கருதுகின்றனர். மேலும் இந்த அன்புச்சவர் இங்கிருந்து அகற்றப்பட்டு திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலைய வாசலில் புதிதாக அமைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in