

10 ஆண்டுகள் கடந்து கோவையில் நேரடியாக மக்களவைத் தொகுதியில் களம் காண்கிறது திமுக. இதற்கான காரணங்கள் என்ன? பாஜக - அதிமுக கூட்டணி விரிசல் மட்டும்தான் காரணமா? - சற்றே விரிவாகப் பார்ப்போம்.
கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக கோவையில் நேரடியாக போட்டியிட்டது. அதில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. முதல் இரண்டு இடங்களைப் பிடித்தது அதிமுக, பாஜக என்பது குறிப்பிடதக்கது. அதற்கு முன்பு பல தேர்தல்களில் கோவை தொகுதியைக் கூட்டணி கட்சிகளுக்கு வாரி வழங்கி வந்தது திமுக. கடந்த முறை மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடராஜன் நின்று வெற்றி பெற்றார்.
மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இடம்பெறவிருக்கிறது என்னும் பேச்சுகள் அடிபடத் தொடங்கியதில் இருந்து கோவை தொகுதி கமலுக்கு ஒதுக்கப்படும் என சொல்லப்பட்டது. ஆனால், அவருக்கு ராஜ்ய சபா சீட் வழங்கி ஓரம் கட்டியது திமுக. மீண்டும் கம்யூனிஸ்ட்டுக்கு அந்தத் தொகுதி வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட சூழலில் அவர்களுக்கு திண்டுக்கல் வழங்கி கோவையில் திமுக போட்டியிட முடிவெடுத்தது.
கோவையில் அண்ணாமலை என்ட்ரியால் ரூட்டை மாற்றிய திமுக - பாஜக சார்பாக அண்ணாமலை, வானதி சீனிவாசன் கோவையில் போட்டியிடுவார்கள் என தகவல் கசிந்தது. இதனால், அண்ணாமலை களம் கண்டால் போட்டி கடுமையாகும். எனவே, திமுக நேரடியாக களமிறங்கினால் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய முடியும் எனக் கணக்குப் போட்டுள்ளது. இந்தத் தேர்தலில் டஃப் பைட்டாக உள்ள இடங்களில் நேரடியாக திமுக இறங்குவதுதான் ப்ளான். அதைத்தான் செய்திருக்கிறது.
அதிமுக - பாஜக காம்போ: கோவையைப் பொறுத்தவரை அங்கு அதிமுக - பாஜக என இரு கட்சிகளும் வலிமையாக இருக்கிறது. சமீபத்தில் பிரதமர் மோடி அங்கு ரோட் ஷோ நடத்தியுள்ளார். பல்லடத்தில் பொதுக்கூட்டம் நடத்தினார். கடந்த முறை இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து பாஜக சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனை கோவையில் போட்டியிட வைத்தது. அதில் அவர் தோல்வியடைந்தார்.
ஆனால், இம்முறை இரு கட்சிகளும் தனித்து களம் காணவிருக்கிறது. இதனால், வாக்குகள் சிதறவே அதிகம் வாய்ப்பு இருக்கிறது என எண்ணுகிறது திமுக. காரணம், தமிழகத்தில் கடந்த முறை மோடி எதிர்ப்பு அலை வீசியது. இதனால், திமுகவுக்கு பாஜக - அதிமுக கூட்டணியை வெல்வதில் எந்தக் கஷ்டமும் இல்லை. ஆனால், இம்முறை பாஜக, அதிமுக தனித் தனியே போட்டியிடுவதால் கூட்டணி கட்சிகள் யாருக்கு கோவை தொகுதியைக் கொடுத்தாலும் வெற்றி வாய்ப்பு குறைவுதான் எனக் கணக்குப் போட்டிருக்கிறது திமுக. இதனால், களத்தில் நேரடியாக குதித்துள்ளது.
கோவை வேட்பாளர் யார்? - அதேபோல், இந்தத் தொகுதிக்கு மருத்துவ அணி மாநில துணைச் செயலாளர் டாக்டர் கோகுல், முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார், ஐ.டி விங் மாநில இணைச்செயலாளர் டாக்டர்.மகேந்திரன் ஆகியோர் கோவைக்கு விருப்ப மனு கொடுத்துள்ளனர். மக்கள் நீதி மய்யத்திலிருந்து வெளியேறிய மகேந்திரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட அதிகம் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. நாளை திமுக வெளியிடும் வேட்பாளர் பட்டியலில் அது தெரியவரும்.
2014-ம் ஆண்டு திமுக கோவையில் போட்டியிட்ட போது மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. தற்போது அந்தக் களம் மாறியிருக்கிறது என்றாலும், கோவை திமுகவுக்கு டஃப் பைட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதனால், பலம் வாய்ந்த வேட்பாளர்களை இறக்கி வியூகங்கள் வகுக்க தீவிரம் காட்டி வருகிறது. அதற்கான பலன் என்னவாக இருக்கும் இருக்கும் என்பது நாளடைவில் தெரியவரும்.