

புதுச்சேரி: “எந்த தொகுதியாக இருந்தாலும் பரவாயில்லை. கட்சி முடிவை ஏற்பேன்” என முன்னாள் ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசை, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். அவர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இச்சூழலில் புதுச்சேரிக்கு தமிழிசை இன்று மதியம் வந்தார். ராஜ்நிவாஸில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “புதுச்சேரிக்கு வந்தது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு, தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்தேன். மனசாட்சிப்படி நல்ல திட்டங்களை முன் எடுத்துள்ளேன். 3 மாதங்கள் செல்ல சொன்னார்கள். 3 ஆண்டுகள் சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
ஆளுநர் உரையை தமிழில் ஆற்றினேன். இங்கிருந்து செல்வது மனவருத்தமாக இருக்கிறது. மக்கள் சேவைக்காக சொல்கிறேன். புதுச்சேரி தொடர்பு மனதார, உணர்வால் தொடரும். ராஜினாமா நானே என் விருப்பத்துடன் எடுத்த முடிவு. ஒரு வருடமாக நான் சொல்லி வந்தேன். ஆளுநர் மாளிகை வசதியானது. தெலங்கானாவில் 300 ஊழியர்கள், என்னை சுற்றி 5 சேவை பெண்கள் இருந்தார்கள். அப்படிப்பட்ட வாழ்வை விட்டு விட்டு பொது வாழ்க்கைக்கு வருகிறேன். அதில் அன்பை புரிந்து கொள்ளுங்கள்.
ஆளுநர் பதவி காலம் இன்னும் உள்ளது. சுய நலத்துக்காக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. மக்கள் தொடர்பு சேவைக்காக தான் இம்முடிவு. நான் தமிழகத்தை சேர்ந்தவள். தமிழ் மகள். அதே தமிழ் மகளாகதான் வந்தேன். அன்னிய மாநிலத்தவராக பார்க்காதீர் என கோரிக்கை வைத்தேன். விருப்பப்பட்டு தான் மக்களிடம் செல்கிறேன்.
எந்த தொகுதியாக இருந்தாலும் பரவாயில்லை. நாளை கட்சி அலுவலகத்துக்கு செல்கிறேன். அவர்கள் முடிவை ஏற்பேன். வெற்றிகரமாக நிகழ்வாக இருப்பேன். வசதியான வாழ்வை விட்டு மக்கள் சேவை செய்ய போகிறேன். மக்கள் புரிந்துகொள்வார்கள். புதுச்சேரி மக்கள் புறக்கணிக்கவில்லை. அவர்கள் அன்பு எனக்கு உள்ளது. புதுச்சேரி வளர்ச்சிக்கான ஆலோசனையை முதல்வர், வரும் ஆளுநரிடம் சொல்வேன். சிறுமி கொலை வழக்கில் உள்ளோருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
பெண்கள் பாதுகாப்புக்கு என் குரல் என்றும் ஒலிக்கும். என் பலம் என் மீதும், மக்கள் மீதும், கடவுள் மீதும் நம்பிக்கையுள்ளது. எதிர்வினைகளை புறம் தள்ளுவது பலம். இப்பலம் எனக்கு தேர்தலில் கைகொடுக்கும்.
எந்தத் தொகுதியில் போட்டியிட விருப்பம் என்று கேட்கிறீர்கள். மக்கள் தொடர்புதான் என் விருப்பம். மக்கள் பணியிலிருந்து என்னை பிரிக்க முடியாது. மக்கள் பணி தொடரும். பிரதமர் மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதே வேண்டுகோள். அதுதான் என் ஆசை. வேண்டும் மோடி- மீண்டும் மோடி ஸ்லோகனை தந்தது நான்தான். நான் மக்களுக்காக பணியாற்றினேன். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை” என்று குறிப்பிட்டார்.
சட்டப்பேரவைத் தலைவர் விமர்சனம், ஏற்கெனவே தேர்தலில் தோல்வி அடைந்தது, எதிர்க்கட்சிகள் விமர்சனம் என பல கேள்விகளுக்கு பதில் தரவில்லை. சில கேள்விகளுக்கு சிரித்தபடி இருந்தார்.