குறிவைக்கும் தேமுதிக... விருதுநகர் தொகுதி யாருக்கு? - குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்

குறிவைக்கும் தேமுதிக... விருதுநகர் தொகுதி யாருக்கு? - குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்
Updated on
1 min read

விருதுநகர்: அதிமுகவில் தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இதுவரை எட்டப்பட்டாத நிலையில், விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவது அதிமுகவா அல்லது கூட்டணிக் கட்சியா என்ற குழப்பத்தில் தொண்டர்கள் உள்ளனர்.

கல்விக் கண் திறந்த கர்மவீரர் காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்துக்கு அரசியல் வரலாற்றில் முக்கிய பங்கு உள்ளது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியிருந்து விருதுநகர் மக்களவைத் தொகுதியாக சிவகாசி மறு சீரைப்பு செய்யப்பட்ட தொகுதியானது. சாத்தூர், விருதுநகர், சிவகாசி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிகள் இதில் இடம் பெற்றிருந்தன. கடந்த 2009-ல் சிவகாசி மக்களவைத் தொகுதி விருதுநகர் மக்களவைத் தொகுதியாக மாற்றம் பெற்றது.

தற்போது இத்தொகுதியில் சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருமங்கலம், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. விருதுநகர் மக்களவைத் தொகுதியில் கடந்த 1971-ம் ஆண்டு முதல் இரு முறை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெய லட்சுமியும், 1980-ல் அதிமுகவைச் சேர்ந்த சௌந்தர ராஜனும், 1989-ல் அதிமுக வேட்பாளர் காளிமுத்துவும், 1991-ல் அதிமுக வேட்பாளர் கோவிந்த ராஜுலுவும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

அதன் பின் 1996-ல் திமுக கூட்டணியில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அழகிரிசாமி வெற்றி பெற்றார். அதன்பின் 1998-ல் வைகோவும், 2004-ல் மதிமுக வேட்பாளர் சிப்பிப் பாறை ரவிச்சந்திரனும் வெற்றி பெற்றனர். அப்போது, விருதுநகர் மக்களவைத் தொகுதி சிவகாசி தொகுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின், 2009-ல் நடைபெற்ற விருதுநகர் மக்களவைத் தேர்தலிலும் வைகோ போட்டியிட்டார். அப்போது, திமுக கூட்டணியிலிருந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 3,07,187 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

2014-ல் அதிமுக வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணனும், 2019-ல் 4,70,883 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றிபெற்றார். 3,16,329 வாக்குகள் பெற்று தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி 2-ம் இடத்தைப் பெற்றார்.

இந்தப் பின்புலத்தில், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இம்முறை விருதுநகர் தொகுதியை தேமுதிக குறிவைத்துள்ளது. அதிமுக தரப்பில் சிவகாசியைச் சேர்ந்த தொழிலதிபர் கணேசனை வேட்பாளராக களமிறக்கவும், மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்.

ஆனால், கடந்த முறை சாத்தூர் தொகுதியிலிருந்து திருமங்கலம் தொகுதிக்குத் தள்ளப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விருதுநகர் மக்களவைத் தொகுதி அதிமுகவுக்கு கிடைக்குமா அல்லது கூட்டணிக்கு ஒதுக்கப்படுமா என்ற குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள் கட்சி தலைமை அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in