அதிமுகவின் வரைவு தேர்தல் அறிக்கை: பழனிசாமியிடம் குழுவினர் வழங்கினர்

அதிமுகவின் வரைவு தேர்தல் அறிக்கை: பழனிசாமியிடம் குழுவினர் வழங்கினர்

Published on

அதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் நேற்று கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமியிடம் வரைவு தேர்தல் அறிக்கையை வழங்கினர்.

மக்களை கவரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க, கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் சி.பொன்னையன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைப்பு செயலாளர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செ.செம்மலை, ஓ.எஸ்.மணியன், மகளிரணி செயலாளர் பா.வளர்மதி, ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.பி. உதயகுமார், இலக்கிய அணி செயலாளர் வைகைச்செல்வன் ஆகிய 10 பேர் கொண்ட குழுவை பழனிசாமி அமைத்துள்ளார்.

இவர்கள், தமிழகம் முழுவதும் கடந்த பிப்.5-ம் தேதி முதல் சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட 9 மண்டங்களில் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்தவர்களிடம் கருத்துகளை கேட்டனர். பிப்.10 தேதி சுற்றுப்பயணத்தை நிறைவு செய்தனர். அதன் அடிப்படையில், அக்குழுவினர் பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி, வரைவு தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர்.

இந்த வரைவு அறிக்கையை அக்குழுவினர் நேற்று, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை,சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் நேற்று சந்தித்து வழங்கினர். அதை இறுதி செய்து, வேட்புமனு தாக்கல் முடிந்ததும் வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in