“மோடியின் நல்லாட்சி தொடரவே பாஜகவுடன் பாமக கூட்டணி” - அன்புமணி விளக்கம்

“மோடியின் நல்லாட்சி தொடரவே பாஜகவுடன் பாமக கூட்டணி” - அன்புமணி விளக்கம்
Updated on
1 min read

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி தொடரவும், தமிழ்நாட்டில் மாற்றங்கள் வருவதற்காகவும் பாஜகவுடன் கூட்டணி முடிவை எடுத்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று (மார்ச் 19) பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜக - பாமக இடையிலான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் பாமகவுக்கு மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், “10 ஆண்டுகாலமாக பாட்டாளி மக்கள் கட்சி டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருந்து வருகிறது. வருகிற மக்களவை தேர்தலை தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து சந்திக்க கட்சி முடிவு செய்திருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி தொடரவும், தமிழ்நாட்டில் மாற்றங்கள் வருவதற்காகவும் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். 60 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மீது மக்களுக்கு வெறுப்பான சூழல் இருக்கிறது. ஒரு மாற்றம் வரவேண்டும் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஆழமாக இருக்கிறது. அதை பூர்த்தி செய்யவே இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.

எங்கள் கூட்டணி, தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுக்க மிகப்பெரிய வெற்றி பெறும். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நிச்சயமாக தேர்ந்தெடுக்கப்படுவார்” என்று அன்புமணி பேசினார்.

பாஜக - பாமக கூட்டணி உறுதியான நிலையில், இன்று சேலத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in