

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு காயிதே மில்லத்தின் பேரனும் கல்வியாளருமான எம்.ஜி,தாவுத் மியாகான் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட உள்ளார். அத்தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அகில இந்திய ஜனநாயக பெண்கள் அமைப்பின் பொதுச் செயலாளருமான ஆனி ராஜா போட்டியிடுகிறார்.
கேரள மாநிலத்தைப் பொறுத்தவரை, எல்டிஎஃப் மற்றும் யுடிஎஃப் ஆகிய கட்சிகள் எதிர் எதிர் அணியில் உள்ளன. இக்கட்சிகள் தேசிய அளவில் இண்டியா கூட்டணியில் மிகப் பெரிய தூண்களாக உள்ளன. இடதுசாரி கட்சிகள் எப்போதும் பாஜகவின் கொள்கைகளை எதிர்த்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் தங்களுக்கு, பல தொகுதிகளில் வெற்றிக்கான வாய்ப்புகள் உள்ளன.
கேரள மாநிலத்தைப் பொறுத்த அளவில் இடதுசாரி கட்சிகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான தொகுதிகளிலேயே வெற்றி வாய்ப்புகள் உள்ளன. காயிதே மில்லத்தின் பேரனான எனக்கு பல்வேறு கட்சிகளுடன் நல்ல நட்புறவு இருந்து வருகிறது. அந்த வகையில் கேரளாவில் மலபார் பகுதிகளில் உள்ள வாக்காளர்களுடன் எனக்கு 50 ஆண்டு கால பழக்கம் உள்ளது.
இப்பகுதிகளில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள், இந்திய கம்யூனிஸ்ட் தலைவருக்கு தங்கள் வாக்குகளை செலுத்த வாய்ப்பு உள்ளது. எனவே இத்தொகுதியை விடுத்து, தாங்கள் வேறு தொகுதியில் போட்டியிட பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.