

சென்னை: தமிழகத்தில் நாளுக்குநாள் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பழனிசாமி: போதை பொருள்புழக்கம் மற்றும் கடத்தல் சம்பவங்களில் குஜராத், அசாம் போன்ற வட மாநிலங்களோடு தமிழகத்தை ஒப்பிட்டு தனக்குத்தானே ஒரு பொய்மை தோற்றத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி வருகிறார். ரூ.2 ஆயிரம் கோடி போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் தங்களது கட்சியினர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலோ, மறுப்போ தெரிவிக்காத முதல்வர், பிரச்சினைகளை திசைதிருப்பும் விதமாக செயல்படுவது எள்ளி நகையாடக் கூடியதாகும்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து தமிழகத்தில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஆனால் போதை பொருள்புழக்கமோ, கடத்தலோ, விற்பனையோ திமுக அரசின் காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை. மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவுதான் அந்தப் பணியை செய்து வருகிறது.
போதை பொருள் வியாபாரத்தின் ஆணிவேரைக் கைது செய்ய இதுவரை திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இனியாவது, தமிழகத்தில் நிலைமையைக் கூர்ந்து கவனித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டிடிவி தினகரன்: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போதை பொருள் கலாச்சாரத்தால் பேரழிவை நோக்கி இளைஞர் சமுதாயம் பயணித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் போதை மாத்திரைகள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப்போக்கையே இவைகாட்டுகின்றன. இவ்விவகாரத்தில் திமுக அரசு இனியும் அலட்சியப்போக்குடன் செயல்பட்டால், வரும் மக்களவைத் தேர்தலில் அதற்கான எதிர்வினையை மக்கள் ஆற்றுவார்கள்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.