

புதுடெல்லி: பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க தமிழக ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி மூத்த வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளனர்.
கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராகப் பதவி வகித்த முன்னாள் அமைச்சர் பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக அவர் மீதும், அவருடைய மனைவி விசாலாட்சி மீதும் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 2011-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு இந்த வழக்கில் இருந்து பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி என இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து கடந்த டிச.19-ம் தேதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு காரணமாக தமிழக உயர்கல்வித் துறை அமைச்சராகப் பதவி வகி்த்த பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோனது.
அதையடுத்து இந்தத் தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
இதன்காரணமாக பொன்முடியை அமைச்சரவையில் சேர்க்க முடிவு எடுத்து, அவருக்கு மீண்டும் அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கோரி, அதுதொடர்பான பரிந்துரையை முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அந்த பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்தார்.
இதையடுத்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பொன்முடியை குற்றவாளி என அறிவித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆளுநர் நிராகரித்து இருப்பது ஏற்புடையதல்ல. இதன்மூலம் ஆளுநர் அரசியல் சாசன விதிகள் 164(1)-ன்படி அரசியலமைப்புச் சட்டத்தை அவர் மீறியுள்ளார்.
ஆளுநர் தமிழக அரசுக்கு இணையாக மற்றொரு அரசாங்கத்தை மாநிலத்தில் நடத்த முயற்சிக்கிறார். இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்து தமிழக ஆளுநர் கடந்த மார்ச் 17 அன்று எழுதியுள்ள பதில் கடிதத்துக்கு தடை விதிக்க வேண்டும். பொன்முடியை மீண்டும் அமைச்சராக்குவது தொடர்பாக தமிழக முதல்வர் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பாக மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வியும், பி.வில்சனும் முறையீடு செய்தனர். அதையடுத்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இதுதொடர்பான விவரங்களை உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்ப அறிவுறுத்தியுள்ளார்.