Published : 19 Mar 2024 05:16 AM
Last Updated : 19 Mar 2024 05:16 AM

தமிழகத்தில் 30,500 மையங்களில் 68,144 வாக்குச் சாவடிகள்: வேட்பாளர் தேர்தல் செலவு ரூ.95 லட்சமானது

மக்களவைத் தேர்தலுக்காக சென்னை தலைமைச் செயலகத்தில் இயங்கிவரும் மாநில அளவிலான வாக்காளர் குறைதீர்க்கும் மையத்தை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ நேற்று ஆய்வு செய்தார்.

சென்னை: மக்களவை தேர்தலில் வேட்பாளர்களின் தேர்தல் செலவு ரூ.70 லட்சத்தில் இருந்து தற்போது ரூ.95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்,வரப்பெற்ற அனைத்து புதிய வாக்காளர் அடையாள அட்டைகளும் விநியோகிக்கப்பட்டு விட்டன. அதன்பின் 5.84 லட்சம் மனுக்கள் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கு வந்துள்ளதால், அவை பரிசீலிக்கப்பட்டு, அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

தேர்தல் தொடர்பான புகார்களை அளிப்பதற்கான ‘சிவிஜில்’ செயலியை மக்கள் ஆர்வமுடன் பயன்படுத்துகின்றனர். ஏற்கெனவே, ஒரு நாளிலேயே 141புகார்கள் வந்துள்ளன. அனுமதிபெறாத, சுவர் விளம்பரங்கள் தொடர்பான புகார்கள் அதிகம் உள்ளன. அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் தேர்தல் தொடர்பான விளம்பரம் வெளியிட, ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும். அதற்காக தற்போது 18 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

தேர்தல் செலவின பார்வையாளர்களை பொறுத்தவரை, தமிழகத்துக்கு தேர்தல் ஆணையம் இதுவரை 58 பேரை தற்போது வரை ஒதுக்கியுள்ளது. விரைவில் அவர்கள் வர உள்ளனர். பொதுவாக காவல்துறை பார்வையாளர் 2 தொகுதிகளுக்கு ஒருவரும், பொதுப் பார்வையாளர் தொகுதிக்கு ஒருவரும், செலவின பார்வையாளர்கள் தொகுதிக்கு 2 பேரும் வருவார்கள். இதில், பொது பார்வையாளர்கள் வேட்பு மனு பரிசீலனைக்கு முந்தைய நாளன்று வருவார்கள்.

நட்சத்திர பேச்சாளர் பட்டியலை வரும் 27-ம் தேதிக்குள் அரசியல் கட்சிகள் வழங்க வேண்டும். தேர்தல் பறக்கும் படை, நிலைகண்காணிப்புக் குழு வானங்களில் தற்போது ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதற்கான கட்டுப்பாட்டறையும் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை, தலா 702 பறக்கும்படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 234 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழு விலும் 4 பேர் இருப்பார்கள்.

பறிமுதல்: நேற்று மாலை நிலவரப்படி ரூ.2.81 கோடி ரொக்கம், ரூ.26 லட்சம்மதிப்பு மதுபானங்கள், ரூ.20 லட்சம் மதிப்புள்ள கஞ்சா, புகையிலை பொருட்கள், ரூ.18 லட்சம் மதிப்புள்ள தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3.50கோடியாகும். கடந்த 2019 மக்களவை தேர்தலில் ரூ.229.73 கோடி ரொக்கம், ரூ.709.66 கோடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், ரூ.236.70 கோடி பணம், ரூ.176.46 கோடி தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தேர்தல் செலவு: மக்களவை தேர்தலின்போது வேட்பாளர்கள் தமிழகத்தில் தேர்தல் செலவு கடந்த 2014-ல் ரூ.40 லட்சமாக இருந்த நிலையில், 2019-ல்ரூ.70 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தற்போது ரூ.95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக நடைபெறும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனான கூட்டத்தில், மாவட்ட தேர்தல் மேலாண்மை திட்டம் உருவாக்குதல், பாதிக்கப்படும், பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்டவை குறித்தும் இதில் விவாதிக்கப்படும். இதுதவிர, தேர்தல் தொடர்பான செயலிகள் குறித்தும் விவாதிக்கப்படும். தேர்தல் தொடர்பான செலவினங்களுக்கு தற்போது வரை ரூ.750 கோடி கேட்டுள்ளோம்.

இவ்வாறு கூறினார்.

வேட்புமனுத் தாக்கல் நாளை தொடக்கம்: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டத்தில் தமிழகத்தில் உள்ள 39 மற்றும் புதுச்சேரி என 40 மக்களவை தொகுதிகள், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கு ஒரேநாளில் ஏப்.19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் நிலையில், தேர்தல் ஆணைய அட்டவணைப்படி நாளை மார்ச் 20-ம்தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனுத்தாக்கலின் கடைசி நாள் மார்ச் 27-ம் தேதியாகும். மார்ச் 28-ம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்படும். வேட்பு மனுக்களை மார்ச் 30-ம் தேதி வரை திரும்ப பெறலாம். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x