

சேலம்: சேலத்தில் இன்று (மார்ச் 19) நடக்கும் பாஜக பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.இதையொட்டி 2,700 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சேலத்தில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்.19-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கவுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாஜக சார்பில் சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் இன்று (மார்ச் 19) நடைபெறும் பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடிகலந்து கொள்கிறார். இதற்காகஇன்று மதியம் 12.30 மணிக்குஹெலிகாப்டர் மூலம் கெஜல் நாயக்கன்பட்டி பொதுக்கூட்ட மைதானத்துக்கு வருகிறார். மதியம் 1 மணிக்குதேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
இதையடுத்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் போலீஸாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஹெலிபேட் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தைச் சுற்றி பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவை மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி தலைமையில் சேலம் எஸ்பி அருண் கபிலன் உள்பட 12 எஸ்பி-க்கள், 4 டிஐஜி.க்கள், 32 டிஎஸ்பி.க்கள், 60 காவல் ஆய்வாளர்கள், 208 எஸ்ஐ.கள், காவலர்கள் என பாதுகாப்பு பணியில் 2,700 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீஸார் வாகனத் தணிக்கை நடத்தி, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து சந்தேக நபர்கள் வருகின்றனரா என கண்காணித்து வருகின்றனர். அதேபோல, தங்கும் விடுதிகளிலும் சோதனை செய்த போலீஸார், சந்தேக நபர்கள் வந்தால் சம்பந்தப்பட்ட எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் பிரதமர் மோடி வந்து செல்லும்வரை வானில் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதித்து எஸ்பி அருண் கபிலன் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல, பிரதமர் வந்து செல்லும் பொதுக்கூட்ட மேடை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரச்சாரக் கூட்டத்துக்கு வந்து செல்பவர்களின் வசதிக்காக வாகன நிறுத்தும் இடம், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தடுப்புகள் என அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.