

கோவை: பிரதமரின் வருகை தமிழக மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மக்களின் பேராதரவுடன் கடந்த ஐந்து நாட்களாக பிரதமர் தென் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இன்று சேலத்தில் பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமரின் வருகை தமிழகத்தில், பாஜகவுக்கு மிகப் பெரிய ஊக்கத்தை தந்திருக்கிறது. தமிழ் மக்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக நல்லாட்சியை பிரதமர் வழங்கி வருகிறார். இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது தான் பிரதமரின் ஒரே எண்ணமாக இருக்கிறது.
அடுத்த 25 ஆண்டுகளுக்கு வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பாஜக-வுக்கு தமிழகத்தில் ஆதரவு இருப்பதை காண முடிகிறது. தேசத்தின் வளர்ச்சிக்கு யார் காரணம் என்றும், தேசத்துக்கு எதிரானவர்கள் யார் என்பதும் தெரியும். ஊழல் குறித்து பேசுவதற்கு திமுகவினர் தகுதியற்றவர்கள். நீலகிரி தொகுதியில் அதிகமான பணிகளை செய்திருக்கிறோம். மக்களவைத் தேர்தலில் அந்த தொகுதியில் போட்டியிட கட்சி தலைமை கூறினால் அதன்படி செயல்படுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அண்ணாமலை கருத்து: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் களிடம் கூறும்போது, “மக்களவைத் தேர்தலில் கோவை உள்பட 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் ‘ரோட் ஷோ’ நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பது இதுவே முதல் முறை. கூட்டணி குறித்த முடிவுகளும் அடுத்தகட்ட மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலும் விரைவில் வெளியிடப் படும்” என்றார்.