Published : 19 Mar 2024 04:02 AM
Last Updated : 19 Mar 2024 04:02 AM

உதகையில் ஆவின் பாலில் புழுக்கள்: உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சோதனை

உதகை: உதகையில் ஆவின் பாலில் புழுக்கள் இருந்ததாக, தேநீர் கடை உரிமையாளர் புகார் கூறினார்.

நீலகிரி மாவட்டத்தில் ஆவின் நிறுவனம் மூலமாக நாள்தோறும் 18 ஆயிரம் லிட்டர் பால் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், உதகை சேரிங்கிராஸ் பகுதியில் இளம் படுகர் சங்க கட்டிடத்தில் தேநீர் கடை வைத்துள்ள சிவக்குமார் என்பவர், தான் வாங்கிய ஆவின் பாலில் புழுக்கள் உள்ளதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சிவராஜ் சென்று, அந்த பாலை ஆய்வுக்கு எடுத்துச் சென்றார். மேலும், அந்த கடையில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் கூறும்போது, ‘‘சிவக்குமார் கூறிய புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட ஆவின் பால் ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. ஆய்வின் முடிவுக்குப் பின் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

ஆவின் பொது மேலாளர் ஜெயராமனிடம் கேட்டபோது, ‘‘நீலகிரி மாவட்டத்துக்கு நாள்தோறும் 18 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப் படுகிறது. கோவை ஆவின் நிறுவனத்தில் இருந்தே இந்த கிரீம் பால் 9500 லிட்டர் வாங்கி விற்பனை செய்யப்படுகிறது. வழக்கம் போல் இன்றும் கோவையில் இருந்து 9500 லிட்டர் பால் வாங்கி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், கோவை மாவட்டத்தில் இதே பால் நேற்று மட்டும் ஒரு லட்சம் லிட்டர் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆவின் பால் இரண்டு முறைகளில் பதப்படுத்தப்படுகிறது. காய்ச்சி தயாரிக்கப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்படும். இதில், நுண் கிருமிகள் கூட அழிந்துவிடும். மற்றொரு முறையில், பாலாடைகள் ஏற்படாமல் இருக்க அதிக அழுத்தத்தில், இயந்திரங்களின் மூலமாக பால் பதப்படுத்தப் படும். இதனால், எக்காரணம் கொண்டும் ஆவின் பாலில் புழுக்கள் இருக்க வாய்ப்பில்லை. வேறு காரணங்களால் புழுக்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளது அல்லது பல நாட்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்த பாலில் புழுக்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளது. மேலும், கோவை, நீலகிரி மாவட்டங்களில் விநியோகம் செய்யப்பட்ட எந்த இடத்திலும் இது போன்ற புகார்கள் இல்லை. எனவே, ஆவின் பாலில் புழுக்கள் இருக்க வாய்ப்பில்லை. இது குறித்து முறையாக விசாரணை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x